இன்று நேற்று நாளை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

indru

டைம் டிராவலை கதைக்களமாகக்  கொண்டு எடுக்கப்படும் படங்கள் எல்லாமே பெரும்பாலும் ஹாலிவுட் படங்களாகத்தான் இருக்கும். இந்திய சினிமாவைப் பொருத்தவரை ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமும் பல வருடங்களுக்கு முன்பு ரிலீசானது. ஆனால் அந்தப் படங்கள் எந்த வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை.

இருந்தாலும் தமிழில் அப்படி ஒரு முயற்சியை தைரியமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார்.

‘கால எந்திரம்’ நம் கைக்கு கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு பின்னாடியும் போகலாம். முன்னாடியும் போகலாம். அப்படி போகும் போது நடக்கும் சுவாரஷ்யங்களைத் தான் ‘இன்று நேற்று நாளை’ படத்தில் தந்திருக்கிறார்கள்.

‘கெஸ்ட் ரோல்’ விஞ்ஞானியான ஆர்யா இன்னும் 50 வருடங்கள் கழித்து அதாவது எதிர்காலமான 2065ல் ஒரு கால எந்திரத்தை கண்டுபிடிக்கிறார். அதை சோதனை செய்ய ஆசைப்படும் அவர் அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஒன்றான 2015ம் ஆம் ஆண்டுக்கு அதாவது நிகழ்காலத்துக்கு அனுப்புகிறார்.

பூமிக்கு வந்த எந்திரமோ திரும்பிச் செல்லாமல் பைபாஸ் ரோட்டை ஒட்டிய ஒரு சின்ன காட்டுப்பகுதிக்குள் விழுகிறது. அதே இடத்தில் சிறிய விபத்து ஒன்றில் சிக்கும் ஹீரோ விஷ்ணு அவரது நண்பர் கருணாகரன், விபத்துக்கு காரணமான வண்டியை ஓட்டி வந்த இன்றைய விஞ்ஞானி டி.எம்.கார்த்திக் ஆகியோர் அந்த கால எந்திரத்தை பார்க்கிறார்கள்.

அதை வைத்து அவர்கள் என்னென்ன விளையாட்டுகளை செய்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோவாக வரும் விஷ்ணு எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் கொடுத்த கேரக்டரை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை திருமணம் செய்வதற்காக காதலி மியா ஜார்ஜ் அவர் அப்பாவிடம் ஷேர் மார்க்கெட்டில் விஷ்ணு எக்ஸ்பர்ட்  என்று பொய் சொல்வதும், அது உண்மையா இல்லையா என்று மியாவின் அப்பா டெஸ்ட் வைத்து விஷ்ணுவை நோகடிக்கும் போதும் நமக்கே பரிதாபம் வருகிறது.

பின்னர் கால எந்திரம் வந்தவுடன் அதன்மூலம் பங்குச்சந்தையில் பின்னால் வரப்போகும் ஏற்ற இறக்கங்களை முன்னாலேயே கண்டுபிடித்து சொல்லி தனது புத்திசாலித்தனத்தை காட்டி இவர் தான் என் பொண்ணுக்கு சரியான மாப்பிள்ளை என்று பாராட்டு வாங்குவதும் நல்ல வேடிக்கை.

ஹீரோயின் மியா ஜார்ஜ் அழகுப்பதுமையாக வருகிறார். தன் காதலில் ஜெயிக்க அவர் போராடும் காட்சிகள், பிறகு கால எந்திரத்தின் அற்புதங்களை பார்த்து வியக்கும் காட்சிகள். தன் அம்மா பிரசவத்தை தானே முன்னின்று பார்த்து தன்னை குழந்தையாக தானே தூக்கி வைத்துக் கொஞ்சுவதும் செம டச்சிங்.

Related Posts
1 of 6

ஹீரோ விஷ்ணுவுடன் கூடவே வந்து காமெடிக்கு கியாரண்டி தருகிறார் கருணாகரன். அதிலும் இதுக்கெல்லாம் பரீட்சை வெச்சுத்தான் மச்சான் செலெக்ட் பண்றாங்க என்று ஜோசியர் ஆவதற்கு பரீட்சை எழுதுவதும், விஷ்ணுவின் வாழ்க்கையையே கேள்விக்கு பதிலாக எழுதி வைப்பதும் நல்ல டைம்பாஸ்.

ஹீரோயின் அப்பா அதாவது விஷ்ணுவின் மாமனாருக்கு வில்லனால் ஆபத்து என்பதை அறிந்து அந்த காலகட்டத்துக்கு போவதும், போனால் மீண்டும் நிகழ்காலத்துக்கு வர முடியாது என்று தெரிந்தும் காதலிக்காக அந்த வேலையைச் செய்வதும் என்னோட பேமிலியை நீ பார்த்துக்கடா என்று கருணாவிடம் சொல்லி விடைபெறும் காட்சிகளும் நல்ல நட்புக்கான அடையாளம்.

ஒருபக்கம் கருணாகரன் சிரிக்க வைக்கிறார் என்றால் தான் வரும் காட்சிகளில் எல்லாம் ஆட்டோமேட்டிக்காக தியேட்டரை சிரிக்க வைக்கிறார் இன்றைய விஞ்ஞானியாக வரும் டி.எம்.கார்த்திக்.

‘வாய்ஸ் ஓவர்’ மூலம் இயங்கும் ஒரு காரை கண்டுபிடிக்கும் அவரிடம் ஒரு பெண் மிக்ஸியை ரிப்பேர் பண்ணக்கொடுத்து விட்டு வாங்க வரும்போது கூடவே அங்கேயே சட்னிக்கு தேங்காய் அரைத்து விட்டுச் செல்வதெல்லாம் காமெடியின் உச்சம்.

வில்லனாக வரும் சாய் ரவி, கதையின் டிவிஸ்ட்டாக வரும் வி.எஸ்.ராகவன், மியா ஜார்ஜின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் என இதர கேரக்டர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

வசந்த்தின் ஒளிப்பதிவு ஒரு ஹாலிவுட் படத்துக்கான தரத்தை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறது. ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஓ.கே.

எதை எப்படிச் சொன்னால் ரசிகர்களிடம் சென்று சேரும் என்பதை உணர்ந்து ஒரு ‘சயின்ஸ் பிக்ஸன்’ கதையை காமெடியான திரைக்கதையாக்கி விறுவிறுப்பான படமாக தந்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.

கதை இன்று நேற்று நாளை என்கிற டைட்டிலுக்கு ஏற்ப மூன்று காலகட்டங்களிலும் நகர்வதால் முழுப்படத்தையும் கவனமாக கண் இமைக்காமல் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு சீன் நிகழ்காலம் என்றால் அடுத்த சீன் எதிர்காலமாக இருக்கிறது. ஆக காட்சிகள் மாறி மாறி வருவதில் ரசிகர்களின் மனநிலை குழப்பமடைவது நிச்சயம், அதிலும் பி அண்ட் சி ரசிகர்கள் கதி அதோ கதி தான்.

இருந்தாலும் வழக்கமான ஆக்‌ஷன், லவ் மசாலாக்களில் இருந்து ஒரு வித்தியாசமான ரசனைக்கு கேரண்டி கொடுத்திருக்கிறது ‘இன்று நேற்று நாளை’.