‘இருவர் ஒன்றானால்’ படத்தில் இணைந்த நிஜ காதல் ஜோடி!

Get real time updates directly on you device, subscribe now.

iruvar

திரையுலகம் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடித்து பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி எல்லாம் இணைந்து அமைந்த ஒரு ஹிஸ்டரி இது.

அப்படி என்ன கதை?

பெரும்பாலும் படத்தில் நடிக்கும் போது நாயகன் நாயகிகள் யாரோ இருவராக வருவார்கள். நடிக்க வந்த பிறகு காதலில் விழுந்து இருவர் ஒன்றாகி படப்பிடிப்புக் குழு கலைந்த பின்னும் அவர்கள் மணமாகி இணைவது நடக்கும். இப்படித்தான் பாக்யராஜ் – பூர்ணிமா, பார்த்திபன் – சீதா, செல்வமணி – ரோஜா, சூர்யா – ஜோதிகா போன்று பல ஜோடிகள் உருவானார்கள்.

ஆனால் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடிக்க வந்த நாயக நடிகர் பி.ஆர்.பிரபுவும், நாயகி நடிகை கிருத்திகா மாலினியும் படத்தில் நடித்த போதே 6 ஆண்டு அனுபவமுள்ள நிஜக் காதலர்கள் என்பது மாறுபட்ட அனுபவம் மட்டுமல்ல இது நிச்சயமாகப் புதுமைதானே?

காதல் அனுபவத்தைப் பற்றி பி.ஆர்.பிரபுவிடம் கேட்ட போது

“எனக்கு சொந்த ஊர் சேலம். வீட்டுக்கு ஒரே பையன் நான். அப்பா அட்வகேட். நான் சென்னையில் இந்துஸ்தான் கல்லூரியில் பி.இ முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தேன். இந்தப் படிப்பு குடும்பத்தினர் திருப்திக்காகப் படித்தது. எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. நண்பர்கள் தொடர்பில் பல படப்பிடிப்புகள் சென்று ஒரு உதவி இயக்குநர் போல இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்ததுண்டு.

இப்படி ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் பல படங்களில் வேலைகளைப் பார்த்ததுண்டு. அப்போது தான் சம்பத்குமார், அன்பு.ஜி பழக்க மானார்கள். அவர்கள் தனியாகப் படமெடுக்க முடிவு செய்தபோது நான் நடிப்பது என்றானது. ஒரு கதாநாயகி தேடிய போது நான் கிருத்திகா மாலினியை பற்றிக் கூறினேன். நேரில் பார்த்து விட்டு தேர்வு செய்தார்கள்.”

“நான் சினிமாவுக்கு வருவது என்று முடிவெடுத்த போது அதற்காக டான்ஸ் கற்றுக் கொண்டேன். அப்போது கிருத்திகா மாலினி அங்கு வருவார். இருவருக்கும் பழக்கமானது. ஒரு கட்டத்தில் இருவரிடையே உள்ளது வெறும் நட்பு அல்ல. ‘அதுக்கும் மேல’ என்று புரிந்து ஐலவ் யூ சொல்லிக் கொண்டோம். இதற்கே சில மாதங்கள் ஓடி விட்டன. இப்படி காதலித்து 6 ஆண்டுகள் ஆன பின்புதான் சினிமாவில் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்தோம். கிருத்திகாவிடம் எனக்குப் பிடித்தது அவர் வெளிப்படையானவர். எப்போதும் ஜாலியாக சந்தோஷமாக இருப்பவர். சுருக்கமாகச் சொன்னால் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி கேரக்டர். கிருத்திகா படத்தில் நடித்ததற்கு நேர் எதிர்மாறான கேரக்டர் அவர் .

காதலிக்க ஆரம்பித்த காலத்தில் வான்வெளியில் பறப்பது போலிருந்தது. மனசுக்குள் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்தது. சற்றுக் காலம் கழித்து நடைமுறையில் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என்று சிந்திக்க தொடங்கினோம். இருவர் வீட்டு சம்மதமும் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்ததும் காதலர்தினத்தின் மறுநாள் 15.2.2015ல் சேலத்தில் திருமணம் நடந்தது. 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடந்தது என்றார்.

இதே கேள்விகளை கிருத்திகா மாலினியிடம் கேட்டபோது ”ஆரம்பத்தில் எங்கள் காதலுக்கு வீட்டில் சம்மதிக்கவில்லை. சினிமாவில் நடிப்பதற்கும் சம்மதிக்கவில்லை. படத்தில் கவர்ச்சி, கட்டிப்பிடிக்கிற காட்சி எல்லாம் கூட இல்லை என்று கூறினோம். ‘இருவர் ஒன்றானால்’ படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் என்றதும் சம்மதித்தார்கள்.

பிரபு எல்லாருடனும் சுலபமாக பழகி நண்பராகி விடுவார். பந்தா இல்லை. எளிமையானவர் யாருக்கும் நண்பராகி ஆதரவு தருவார், என்னைப் பொறுத்தவரை காதல் இனிமையானதுதான். ஆனால் கனவில் மிதப்பது அல்ல. நம் வாழ்க்கைத்துணை நம்மைப் புரிந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.

சுயநலமாக என்னைப்பற்றி மட்டுமே சிந்திப்பதல்ல காதல். பலம் பலவீனங்களை வெளிப்படையாக கூறி எல்லாவற்றையும் பகிர்வதுதான் நிஜக்காதல். நான் விஸ்காம் படித்துள்ளேன். விஜய் டிவியில் கூட உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளேன்.

‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்த அனுபவம் சினிமா பற்றிய பல தவறான கற்பனைகளை உடைத்தது. வெளியிலிருந்து சினிமா பற்றி. சுலபமாக கமெண்ட் பண்ண முடியும். கஷ்டம் புரியாது. நான் நடித்ததன் மூலம் சினிமாவின் சிரமங்களை நேரில் அறிய முடிந்தது. இனியும் அவர் மற்றவர்களுடன் ஒரு நடிகராக நடிக்கும் போது எல்லாம் நடிப்பு என்றே பார்ப்பேன்.

நான் விளம்பரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இனி நடிப்பதா இல்லையா என்பதை ‘இருவர் ஒன்றானால்’ பட வரவேற்புக்குப்பின் தான் முடிவு எடுக்க முடியும். இருந்தாலும் விஸ்காம் படித்த நான் சினிமாவில் ஈடுபட எவ்வளவோ துறைகள் உள்ளன.” இவ்வாறு கிருத்திகா கூறினார்.

‘இருவர் ஒன்றாகி’ இணைந்த காதலர்களுக்கு வாழ்த்துக்கள்.