நடுக்காட்டில் ஷூட்டிங் : பயமே இல்லை பல் டாக்டருக்கு!
சமீபகாலமாக பெருகி வரும் பேய் படங்களின் வரிசையில் படம் முடிந்து வெளி வர தயாராகும் நிலையில் உள்ள படம் ‘ஜின்’. நகைச்சுவை மிளிர தயாராகி வரும் ஜின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் புதுமுகம் டாக்டர் மாயா.
புன்சிரிப்பில் எவரையும் மயக்கும் வல்லமைக் கொண்ட டாக்டர். மாயா ஒரு பல்மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சார்ந்த தொழிலில் இருந்து சினிமாவுக்கு வந்ததே அதன் மேல் உள்ள காதலால் தானாம்.
‘இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே பெரிய ஆசை. ‘கஜினி’ படத்தின் நாயகி கல்பனா போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் இருக்கவே செய்கிறது.
அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூர்யா சாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் கனவு. எனக்கு பிடித்த கதாநாயகி ஜெனிலியாதான். அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள் இயல்பாகவே டீன் ஏஜ் இளம் பெண்கள் போலவே இருக்கும். அந்த நடிப்பை அவர்தான் பிரமாதமாக பிரதிபலிக்கிறார். என் கல்லூரி தோழிகள் பலர் அவரை போலவே நடித்தும், நடந்தும் கொள்வர்.
‘ஜின் படத்தை தொடர்ந்து என் அடுத்த படத்துக்காக நான் ஏகப்பட்ட கதைகள் கேட்டு வருகிறேன். பெயர் வாங்கும் அளவுக்கு பாத்திரம் இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். ‘ஜின்’ படத்தில் என்னுடைய அனுபவங்கள் ஏறத்தாழ படத்தின் மைய கதையான பேய் கதை போலத்தான்.
காளி வெங்கட், ‘காதலில் சொதப்புவது எப்படி’ அர்ஜுனன், முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த், மெட்ராஸ் ஜானி என்ற வளர்ந்து வரும் நகைச்சுவை கலைஞர்களுடன் 40 நாட்கள் படப்பிடிப்பு என்றால் எப்படி இருக்கும். சிரித்து சிரித்து வயிற்று வலி தான்.
இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை கதாநாயகர்கள் ரமீஸ் ராஜாவும், ‘மெட்ராஸ்’ கலையும். தொடர்ந்து 40 நாட்களும் சில்லிடும் இரவுகளில் நடுக்காட்டில் படப்பிடிப்பு என்றாலும், இவர்களின் கலாட்டாவால் படம் முடிந்ததே தெரியவில்லை என்று சிலாகித்தார் டாக்டர் மாயா.