காரி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

காரி களத்தில் துள்ள வேண்டும்..நாயகன் அதை அடக்க வேண்டும். காளையை அடக்கினால் எல்லா வேலைகளும் சுபமாக நடைபெறும். இதுதான் காரியின் ஒன்லைன்

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பின்புலமாக வைத்து கதையை புனைந்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். படத்தின் கதைப்படி சென்னையில் குதிரை ஜாக்கியாக இருக்கும் சசிகுமார் தன் சொந்த ஊருக்கு வரவேண்டி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன? ஊருக்கு வந்த சசிகுமார் செய்தவை எல்லாம் என்ன? என்பதே படத்தின் கதை

இப்படியான படங்களில் சூறாவளியாக சீறும் சசிகுமார் இப்படத்தில் அநியாயத்திற்கு சோர்வாக நடித்துள்ளார். இக்கேரக்டருக்கு இவர் தான் பொருத்தம் என்ற பெயரை சசிகுமார் இப்படத்தில் வாங்காதது வருத்தமே! அவருக்கும் சேர்த்து நடித்துள்ளார் நாயகி அருண் பார்வதி. அவரின் கண்களும் அவை சிந்தும் கண்ணீரும் கூட அழகாக நடித்துள்ளன. அம்மு அபிராமி எதோ கொஞ்சம் தலை காட்டுகிறார். பாலாஜி சக்திவேல் இப்படத்தின் மூலம் தானொரு மிகச்சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆடுகளம் நரேன் கொடுத்த கேரக்டருக்கு 100% நியாயம் சேர்த்துள்ளார். வில்லன் கேரக்டர்களில் வரும் சிலரின் நடிப்பில் பெரிய ஆழமில்லை

இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அங்கே இடி முழங்குது பாடலை சற்று மாத்திப்போட்டு ஒரு பாட்டு செய்திருக்கிறார். அது உற்சாகம்! பின்னணி இசையில் காரியூர் கிராமம் அதிர்கிறது. கணேஷ் சந்திராவின் கேமரா ராமநாதபுர மாவட்டத்தை மிகையில்லா நிறையோடு காட்டியுள்ளது

படத்தில் தான் எழுதிய எல்லா எமோஷ்னல் காட்சிகளையும் காட்டிவிட வேண்டும் என்ற துடிப்பு இயக்குநருக்கு இருந்துள்ளதை பார்க்க முடிகிறது. அதனால் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு அடித்துள்ளார். அதில் சில வொர்க்கவுட் ஆகியுள்ளது..பல மிஸ் ஆகியுள்ளது. மாடுகளை வெட்டும் மிஷினை காட்சியாக காட்டுகையில் நெஞ்சு பதறுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நேர்த்தியாக காட்டியுள்ளமையும் பாராட்டத்தக்கது

கதையில் உள்ள ஆழத்தை திரைக்கதையிலும் காட்டியிருந்தால் காரி இன்னும் சீறியிருந்திருக்கும்
3/5