காவல் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

kaaval-review

ல்லதை சொல்கிறார்களோ? கெட்டதை சொல்கிறார்களோ?

‘காக்கி கதை’ என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்து விடுகின்றன.

சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’ முதல் சூர்யாவின் ‘சிங்கம் – 2’ வரை ரசிகர்களின் ஆதரவை குவித்த காக்கி படங்களை பெருமையோடு பட்டியல் போடலாம்.

ஆனால் எல்லா காக்கி படங்களும் அந்த லிஸ்ட்டில் சேருவதில்லை என்பதே நிதர்சனம்.

படத்தில் ஹீரோ விமல் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் காக்கிச் சட்டையை உடுத்துவது என்னவோ சமுத்திரக்கனி தான்.

கதைப்படி ஹீரோ விமலும் குண்டு அஸ்வின் உள்ளிட்ட சகாக்களும் போலீஸ் அப்பாக்களான எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர்களின் பிள்ளைகள்.

மூன்று அப்பாக்களும் ”என்னங்க இந்த மாசம் மாமூல் ரொம்ப கம்மியா இருக்கு?” என்று வீட்டுக்கு வந்தவுடன் மனைவிமார்களே கேட்டு வாங்குகிற அளவுக்கு லஞ்சப்பணத்தில் திளைப்பவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற ஏரியாக்களில் கலக்கி வரும் கருணா என்கிற ரெளடியோடு கூட்டு வைத்து மாமூல் வாங்கிக் கொண்டு அவன் செய்கிற அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

அவனைப்பற்றி தெரியவரும் நேர்மையான போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி எண்கவுண்ட்டரில் போட்டுத்தள்ள திட்டமிட்டு மாறு வேஷத்தில் அவனுடைய நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.

அதற்கான அனுமதி மேலதிகாரியிடமிருந்து வந்தாலும் கருணாவின் விசுவாசிகளில் ஒருவரான விமல் அவனுக்கு தகவலைச் சொல்லி தப்பிக்க வைத்து விடுகிறார்.

இந்த விஷயம் தெரியவரும் போது விமல் அவனது சகாக்களின் உதவியோடு கருணாவை போட்டுத் தள்ள திட்டமிடுகிறார். இதனால் கடுப்பாகும் கருணாவோ ”கடைசியில உங்க போலீஸ் புத்தியைக் காட்டிட்டீங்கள்ல..?” என்று விமல் உள்ளிட்ட நண்பர்கள் கூட்டத்தை பழி வாங்க கிளம்புகிறான்.

அவன் கொலை வெறியிலிருந்து விமல் அன்கோ தப்பித்தார்களா? அல்லது கருணா என்கவுட்டரில் பலியானாரா? இல்லையா? என்பதே மீதி.

இதற்கிடையே ஹீரோயின் புன்னகைப் பூ கீதாவை பார்த்த மாத்திரத்தில் விமல் காதலிக்கத் தொடங்கி அவருடைய ஈவண்ட் மேனேஜ்மெண்ட்டுக்கு உதவி செய்வது என்கிற இடைச்சொறுகலும் உண்டு.

போஸ்டரில் விமலின் படத்தை பெரிதாகப் போட்டு விளம்பரப்படுத்தும் வேலைகளை நடந்தாலும் படத்தில் என்னவோ அவர் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் போலத்தான் வருகிறார். அவருக்கான முக்கியத்துவமும் ரொம்ப ரொம்ப கம்மியாக இருப்பது கவலைக்கிடம்.

ஹீரோயினாக வரும் ( படத்தின் தயாரிப்பாளரே?) புன்னகைப் பூ கீதா விமலுக்கு எந்த விதத்திலும் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகாமல் அவுட்டாகி நிற்கிறார்.

டூயட்டுகளில் விமலை விட வயசு அதிகமானவராக தெரிவதைக் கூட மன்னித்து விடலாம். சமுத்திரக்கனி கீதாவை அழைத்து விசாரனை செய்யும் காட்சிகளில் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டாமல் தேமே என்று பார்த்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு நல்ல தயாரிப்பாளராக மட்டுமே கீதா பணியைத் தொடர்வது அவருக்கு மட்டுமல்ல பாவப்பட்ட ரசிகர்களுக்கும் சாலச்சிறந்தது.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி இடைவேளைக்கு முன்பு வரை சாதுவாக வந்து அதன் பிறகு போலீசுக்கே உரிய மிடுக்குடன் பொங்குகிறார்.

இலவச சட்ட ஆலோசனை என்கிற போர்டை வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் காசை வசூலிக்கு நமோ நாராயணா கேரக்டர் நல்ல தமாஷ்.

சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர் என மூன்று காமெடியன்கள் இருந்தும் படத்தில் அந்த ஏரியாவில் பெரிய வறட்சி தெரிகிறது.

என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஜி.வி.யின் இசையில் பாடல்கள் என்கிற பெயருக்கு இருக்கிறதே தவிர கேட்கிற மாதிரி இல்லை. தருண்குமாரின் பின்னணி இசையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

தமிழ்நாட்டில் காசுக்காக நடக்கும் கொலைகள் அதிகரித்து விட்டன. சென்னையில் மட்டுமே நடந்து கொண்டிருந்த அந்த மாதிரியான கொலைகள் இப்போது தமிழகம் முழுவதும் பரவி விட்டது. அதற்கு கருணா மாதிரியான ரெளடிகள் தான் காரணம் என்கிற செய்தியை சொல்லியிருக்கிறார் இயக்குநர் நாகேந்திரன். ]

என்கவுண்ட்டரை வைத்து எத்தனையோ காக்கி கதைகள் வந்து விட்டதால் இதில் புதிதாக பார்ப்பதற்கு ஒன்றுமேயில்லை. பல காட்சிகள் ஏற்கனவே ரிலீசான பல காக்கி படங்களில் பார்த்து பார்த்து சலித்தவை தான். அதிலிருந்து சில காட்சிகள் சலித்தெடுத்து படமாக்கியிருக்கிறார்.

மொத்த படத்திலும் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல ஒழுங்கீனங்களை காட்சிப்படுத்தி காட்டி விட்டு,  சமுத்திரக்கனி கேரக்டரில் மட்டும் நேர்மை, நியாயம், தர்மம் என்று அட்வைஸ் செய்கிறார் இயக்குநர்.  பட் படத்தில் அது மட்டுமே பலவீனம் அல்ல…