ரசிகர்களின் பலம் தான் ‘பாபநாசம்’ படத்தின் வெற்றி! : கமல் பெருமிதம்
‘த்ரிஷ்யம்’ மலையாளப்படத்தின் தமிழ் ரீமேக் வடிவமான ‘பாபநாசம்’ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கமலைப் பொருத்தவரை இந்த வெற்றி ‘விருமாண்டி’ படத்துக்குப் பிறகு கிடைத்த உண்மையான வெற்றி. இந்த வெற்றியில் ஊடகங்களின் பங்களிப்பும் அதிகளவில் இருந்தது என்பதை உணர்ந்த கமல் இன்று அவர்களை சந்தித்து தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
அதோடு இந்த வெற்றி இன்னும் பல நல்ல திரைப்படங்கள் தமிழில் வெளியாக ஊந்து சக்தியாக இருந்துள்ளது. அதற்கும் ஊடகங்களின் ஆதரவு தொடர்ந்து வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் வழக்கமான ‘நன்றி அறிவிப்பு’ என்பது அந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் பேச்சோடு முடிந்து விடும். ஆனால் கமலோ வித்தியாசப்படுத்தியிருந்தார்.
படத்தில் இடம்பெற்றிருந்த டீக்கடை, ராணி இல்லம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை செட் போட்டு, படத்தில் வந்த அத்தனை நடிகர், நடிகைகளையும் அந்த செட்டுக்குள் மேடையேற்றியிருந்தார்.
அந்த சுவாரஷ்யம் முடியவும் பேசினார் கமல்.
“இது வெற்றி விழா இல்லை. என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தை 40 நாளில் எடுத்து முடித்த அன்றைக்கே எனக்கு வெற்றி விழா தான். ஏனென்றால் அதுவே பெரிய விஷயம். அதை செய்து காட்டிய இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கும் வெற்றி விழா எடுத்து விட்டோம்.
வியாபாரத்துக்காக பல விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு நாங்கள் செய்யும் படங்களை விட, இந்த மாதிரி படங்கள் எங்களுக்கும் எங்கள் மனதிருப்திக்கும், உங்கள் மனதிருப்திக்கும் ஆளாவது வியப்பான விஷயம். ஆச்சரியமான நிகழ்வு.
இதை கொண்டாடுவதற்கு முன் இதை கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி சொல்லும் கடமை எனக்கு உள்ளது. இது போன்ற நல்ல தமிழ்ப்படத்தை நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.
இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் ஜூத்து ஜோசப் என்று முடிவு செய்தவுடன் ”இதில் கமல் சார் நடித்தால் நன்றாக இருக்கும்” என்று மோகன்லால் சொன்னதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். அவருடைய பெருந்தன்மைக்கும், பரிந்துரைக்கும் நன்றி.
இந்தப் படத்தில் பங்குபெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் என்னுடைய ‘தூங்காவனம்’ படத்திலும் இணைந்திருக்கிறார்கள். இதில் நடித்த பல கலைஞர்கள் என்னுடைய படங்களில் நடிப்பார்கள் என்பதற்கு ரசிகர்கள் கொடுத்த பலம் தான் இந்த வெற்றி. அவர்களுக்கு நன்றி.
‘உலக நாயகன்’ என்பது ரசிகர்கள் எனக்குக் கொடுத்த பட்டம். என்னுடைய பெயர் என்ன என்று கேட்டால் ‘நடிகன்’ என்று சொல்லுவேன். கமல்ன்னு என்னை குறிப்பிட்டுச்சொல்லும் போது யாரோ வேறு ஆளைப் பற்றி சொல்வது போல இருக்கிறது. நடிகன், கலைஞன் என்று சொன்னால் என்னைச் சொல்வது போல இருக்கிறது. அவ்வளவு தான் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த பட்டங்கள் எல்லாம் நூல் கட்டாமலேயே பறக்கும் பட்டங்கள் போலத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ‘உலக நாயகன்’ பட்டம் எனக்கு ரசிகர்கள் அன்புடன் கொடுத்த பட்டம். அதை ரசிகர்களின் சந்தோஷத்துக்காக வைத்திருக்கிறேன். எனக்கு அதில் சந்தோஷமில்லை. நல்ல நடிகன் என்று மீண்டும் உங்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் போது அதில் வருகிற சந்தோஷத்தை இந்த பட்டமெல்லாம் மிஞ்சவே மிஞ்சாது. என்றார் கமல்.