கங்காரு – விமர்சனம்
பேய்கள் வரிசைக்கட்டி வந்து கோடம்பாக்கத்தை லீசுக்கு எடுத்து ஆண்டு கொண்டிருக்கும் சீஸன் இது.
அந்த சீஸனுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணன் – தங்கை பாசத்தை பெருமையாக சொல்லும் படமாக வந்திருக்கிறது இந்த ‘கங்காரு’.
படத்தின் இயக்குனர் சாமி ஏற்கனவே ‘உயிர்’ படத்திலிருந்து அமலாபால் ஷகிலா ரேஞ்சில் கவர்ச்சி காட்டிய ‘சிந்து சமவெளி’ வரை சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர். அதனாலே இந்தப்படம் எப்படியிருக்குமோ? என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக வரலாம்.
அவர்களுக்கெல்லாம் அப்படி முகம் சுளிக்கக்கூடிய அளவுக்கு எந்த பலான விஷயங்கள் இந்தப் படத்தில் இல்லை என்பது மட்டுமே பதில்.
பாசமே உன் விலை என்ன? என்று கேட்கிற அளவுக்கு மனிதர்கள் மத்தியில் குறைந்து வருகிற அன்பை ஒருபடி மேலே தூக்கிபிடித்து உறவுகளுக்கிடையே பாசம் ரொம்ப முக்கியம் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது இப்படம்.
ஹீரோ அர்ஜூனா ஆளைப்பார்த்தால் நல்லி எழும்பை கடிக்கும் ராஜ்கிரனை போல முரட்டு ஆசாமி. தன் தங்கச்சி பிரியங்காவை எவனாவது ஒரு வார்த்தை தப்பாக பேசி விட்டாலும் அவனை உண்டு, இல்லை என்றாக்கி விடுவான். அப்படிப்பட்ட பாசக்கார முரட்டு யானையை அடக்கும் ஒரே பாகன் அவனது தங்கை தான்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து எந்த உறவும் இல்லாமல் தங்கையோடு ஊர் ஊராக சுற்றும் அர்ஜூனா கடைசியில் கொடைக்கானலில் இருக்கும் தம்பி ராமையாவிடம் வந்து அடைக்கலமாகிறான்.
பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் அவர் அர்ஜூனாவையும், அவனது தங்கச்சி பிரியங்காவையும் தனது சொந்தப்பிள்ளைகள் போலவே பாசம் காட்டி வளர்க்கிறார்.
இடையில் ஹீரோயின் வர்ஷாவின் அக்கா அவளை தான் சார்ந்திருக்கும் பாலியல் தொழிலில் தள்ள அதே ஊரைச் சேர்ந்த பெரிய மனுஷன் கலாபவன்மணியோடு சேர்ந்து திட்டம் போடுகிறாள். அவளிடமிருந்து அர்ஜூனா அவளை காப்பாற்றுகிறான். இதனால் கடுப்பாகும் கலாபவன்மணி அவனை பழிவாங்க திட்டம் போடுகிறான்.
தங்கச்சிக்காக என்ன வேண்டுமாலும் செய்யும் அர்ஜூனாவுக்கு அவள் அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனை காதலிக்கிறாள் என்கிற விஷயம் தெரிய வருகிறது.
உடனே அவள் ஆசைப்பட்டவனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து மாப்பிள்ளை வீடு தேடிப்போய் நிச்சயம் செய்து விட்டு வருகிறான். அடுத்த நாள் மாப்பிள்ளை ஒரு விபத்தில் இறந்து விடுகிறான். ரெண்டாவதாகவும் ஒரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்கிறான். அவனும் அதேமாதிரி நிச்சயம் செய்த கையோடு விபத்தில் இறந்து விடுகிறான்.
மூன்றாவதாக ஒரு ஆண் விடோவை தங்கச்சிக்கு நிச்சயம் செய்கிறான். அந்த திருமணம் எந்தத் தடையும் இல்லாமல் முடிகிறது. ஆனால் திருமணம் முடிந்த கையோடு அந்த மாப்பிள்ளையை கொலை செய்ய முயற்சி நடக்கிறது.
விவகாரம் போலீஸ் வசம் போக, அப்போது தான் அதற்கு முன்பு நடந்த இரண்டு விபத்துகள் விபத்தல்ல. திட்டமிட்ட கொலைகள் என்று தெரிய வருகிறது.
யார் இந்த கொலைகளை செய்வது? எதற்காக செய்கிறார்கள்? என்கிற கேள்விக்கு நெகிழ்வான கிளைமாக்ஸுடன் விடை தருகிறது படம்.
ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் அர்ஜூனா ஆளைப்பார்த்தால் ஆறடி உசரத்தில் அம்சமான ஆக்ஷன் ஹீரோவாக இருந்தாலும் படம் முழுக்க ஏதோ ரோபோ போலவே வருகிறார்.
ஹீரோயினாக வரும் வர்ஷா பேய்ஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு… என்ற பாடலில் இடுப்பை அசைத்து ஒரு ஆட்டம் போடுவாரே அங்கேயே ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார். எந்த இடத்திலும் ரொமான்ஸ் லுக் காட்டவே காட்டாத ஹீரோ அர்ஜூனாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். கடைசியில் மிஞ்சுவது ஏமாற்றம் தான்.
பாசக்கார தங்கச்சியாக வருகிறார் புதுமுகம் பிரியங்கா. வர்ஷாவை விட இவருக்குத்தான் படத்தில் ஸ்கோப் அதிகம். அண்ணன் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று மூன்றாவது திருமணத்துக்கு ஓ.கே சொல்லும் போது நெகிழ்ச்சி.
வழக்கமாக காட்டுக்கத்தலில் டயலாக்குகளைப் பேசி வெறுப்படிக்காமல் இப்படத்தில் ஒரு குணச்சித்திர கேரக்டரில் வருகிறார் தம்பி ராமையா. வில்லனாக வரும் கலாபவன்மணி நடிப்போடு எஸ்க்ட்ரா மிமிக்ரியால் கிச்சுகிச்சுவும் மூட்டுகிறார்.
அர்ஜூனாவின் தங்கச்சி பிரியங்காவை திருமணம் செய்யும் மூன்றாவது மாப்பிள்ளையாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடித்திருக்கிறார். கொலைகளை துப்பு துலக்க வரும் போலீஸாக இயக்குனர் சாமி நடித்திருக்கிறார். இருவருக்குமே காட்சிகள் குறைவு என்றாலும் கேரக்டர்களில் நிறைவைத் தந்திருக்கிறார்கள்.
காமெடிக்கென்று கஞ்சாகருப்புவை போட்டிருக்கிறார். ஆனால் காமெடி தான் இல்லீங்க…
பிண்ணனிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் அவ்வளவு தூரத்துக்கு மெனக்கிடல் தெரிகிறது. வாழ்த்துகள் சார்!
என்னால் இப்படிப்பட்ட நல்ல குடும்பப் பாங்கான படத்தையும் இயக்க முடியும் என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவே படத்தை துளிகூட ஆபாசம் இல்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. ஆனால் அதற்காக அறுதப்பழசான அண்ணன் – தங்கச்சி செண்டிமெண்ட்டை கதையாகக் கையில் எடுத்தது தான் பெரிய குறை.
மற்றபடி போகிறபோக்கில் ஹாய் சொல்லிவிட்டு அப்படியே மறந்து விடும் மனநிலை கொண்ட ரசிகர்களுக்கு பாசம்னா என்ன? என்பதை உணரை வைப்பதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் சாமி.