கன்னி மாடம்- விமர்சனம்
RATING : 2/5
ஆணவக் கொலையைச் சொல்லிக் காட்டி பாடம் சொல்லியுள்ளது கன்னிமாடம். போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் இது. முதல் படத்திலே முத்திரைப் பதிக்க வேண்டும் என்ற வேட்கையில்,சாதிப்பிரச்சனை, பெரியாரிசம் எனக் குழப்பக் கும்மியடித்து நம்மையும் போட்டுக் குழப்பித் தள்ளியுள்ளார்.
மிக அபாயமான பாதையில் முன்பாதிப் படம் பயணிக்க நமக்குள் ஒரு பயமே வந்துவிடுகிறது. நல்லவேளையாக கவிதை போல் பின்பாதி துவங்கி விடுகிறது. அப்படியே முடித்திருந்தால் கூட செம்ம என்றிருக்கலாம். முடிவில் ட்விஸ்ட் என்ற பெயரில் செய்துள்ள அநியாயம் எல்லாம் வன்கொடுமையில் அல்லவா வரும்?
படத்தில் நெகட்டிவ் கேரக்டர் ஒருவர் சாதியைச் சொன்னால் கூட பரவாயில்லை. மெயின் ஹீரோவே ஒரு இடத்தில் சொல்கிறார் “அவ தாழ்ந்த சாதி”என்று. ஒரு சாதியை தாழ்ந்த சாதி என்று குறிப்பிட இங்கு யாருக்கும் உரிமையில்லை. எந்த தைரியத்தில் போஸ் வெங்கட் இப்படியொரு வசனத்தை வைத்துள்ளார் என்று தெரியவில்லை.
ரோபோ சங்கரின் மனைவிக்கு சில ஷாட்களை வைத்துள்ளார் கேமராமேன். அய்யகோ!! ஆனால் மத்த இடங்களில் தரமான ஒளிப்பதிவு. பின்னணி இசை அதிர்வை ஏற்படுத்தா விட்டாலும் பெரியளவில் மோசமும் இல்லை.
சாதி மாறி திருமணம் செய்துகொண்டுள்ள ஜோடி ஒன்று சென்னை வருகிறது. ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து ஹீரோ குடும்பத்தில் ஒரு ஆணவக்கொலை என்ற மேட்டரும் கதையில் இடம்பெற்றுள்ளது. ஓடி வந்த ஜோடியை தேடி வந்து கொல்ல நினைப்பவர்களை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதும், அந்த ஜோடியில் ஒருவருக்கு நடக்கும் அசம்பாவத்தால் என்ன ஆனது என்பதும் தான் படத்தின் கதை.
மிகச்சிறப்பான படமாக வந்திருக்க வேண்டிய கதை. படு சொதப்பலான திரைக்கதை மற்றும் கதாப்பாத்திர வார்ப்பால் தேங்கி விடுகிறது.
2.5/5