அனிமேஷன் படத்திலாவது தத்ரூபமாக இருப்பாரா? – மீண்டும் தரிசனம் தரப்போகும் ஜெயலலிதா!
மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிகப் பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர்.
பின்னர் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அவரால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. எம்ஜிஆர் எடுக்க ஆசைப்பட்ட அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் தயாராத்து வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ்.
இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிகாட்டு பொன்னையா வரை 28 படங்களில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஜெயலலிதா தான் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார். அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி இந்த அதிகாரப்பூர்வமான அதற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
தொடர்ந்து படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் அருள் மூர்த்தி ”இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. ரத்தம், உணர்வு எல்லாவற்றிலும் இணைந்து இருக்கக் கூடிய இருவர் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும். அவர்களை மீண்டும் பார்க்க மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். நான் என் சிறு வயதில் எம்ஜிஆரை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரது படங்கள் எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.
அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜிட்டலில் மெறுகேற்றும் போது பார்க்க நேர்ந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பே பிரமாண்டத்தோடு தொழில்நுட்பத்தையும் கலந்து சிறந்த படமாக கொடுத்திருந்தார் புரட்சி தலைவர். அதன் முடிவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை அடுத்த வெளியீடாக குறிப்பிட்டிருந்தார். ஒரு முறை ஐசரி கணேஷ் நேரில் சந்தித்த போது இந்த மாதிரி ஒரு படம் செய்யும் முடிவு வந்தது. கதையை தயார் செய்து அவரிடம் சொல்லியிருந்தேன், அவருக்கும் பிடித்து போய் 101வது பிறந்த நாளில் பூஜை போட்டு, 102வது பிறந்த நாளில் வெளியிட முடிவு செய்தோம்.
வால்ட் டிஸ்னி மாதிரி கம்பெனிகள் இந்த படத்தை எடுக்க 4 வருடங்கள் எடுத்து கொள்வார்கள். ஆனால் மிக குறுகிய காலத்தில் இந்த படத்தை நல்ல தரத்தோடு முடிக்கும் நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.
எம்ஜிஆர் படங்களின் ஃபார்முலா இந்த படத்திலும் இருக்கும், இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையிலும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புரட்சி தலைவருக்கு இணையாக புரட்சி தலைவிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக எம்ஜிஆர் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து.
எம்ஜிஆருக்கு பாடல் எழுதியதன் மூலம் அவரது கனவு நிறைவேறியதாக கூறினார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இருந்து ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்ய இருக்கிறோம். சர்வதேச தரத்தில் வெளியாகும் ஒரு தமிழ்ப்படமாக இருக்கும் என்ற இயக்குநர் குருமூர்த்தியிடம் ”அதிமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா சிலை அவரைப்போல தத்ரூபமாக இல்லை என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உங்கள் படத்தில் அனிமேஷனில் வருகிற எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தத்ரூபமாக இருப்பார்களா?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அருள் மூர்த்தி ”நிச்சயமாக எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் இதற்கு முன்பு நீங்கள் எப்படி திரையில் பார்த்தீர்களோ அப்படியே இருவரும் இந்தப் படத்தில் இருப்பார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்காது இது உறுதி” என்றார்.