கொம்பன் – சினிமா விமர்சனம்
‘குட்டிப்புலி’யின் அம்மா – மகன் பாசத்தை ஊர்மெச்ச படமாக்கிக் காட்டிய டைரக்டர் முத்தையா இந்தப் படத்தில் மாமன் – மருமகன் பாசத்தை உலகமே மெச்சும் படி காட்டியிருக்கிறார்.
கதைக்கு போகும் முன்பாக இப்படம் ரிலீசானால் தெற்கில் கலவரம் வெடிக்கும் என்று வழக்கு போட்ட டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒரு பதில்.
”படத்துல எந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப் புடிக்கிறதோ, ஒரு சாதிய தாழ்த்துற மாதிரியான சீன்களோ இல்லவே இல்லை டாக்டரையா… இனிமேலாவது கொம்பன் மாதிரியான நல்ல படங்களை தடை பண்ற எண்ணம் இல்லாம குடும்பத்தோட போய் ரசிங்க. நீங்களும் நல்லா இருப்பீங்க, சினிமாவும் நல்லா இருக்கும்.
சரி கதைக்குள்ள வருவோம்…
பேருக்கு ஏத்த மாதிரியே ஊருக்குள்ள எந்த தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்கிற முதல் ஆள் கொம்பன் கார்த்தி தான்.
அவருக்கும் அதே ஊர்ல கெத்தா திரியிற இன்னொரு கொலைகார குடும்பத்துக்கு பகை மூளுது. இடையில பக்கத்து ஊர்ல இருக்கிற லட்சுமிமேனனை பார்த்த மாத்துறத்துல கார்த்திக்கு பிடித்துப் போக கார்த்தி கொஞ்சம் முரட்டு ஆளா இருந்தாலும் அவனோட நேர்மையைப் பார்த்து தனது மகள் லட்சுமிமேனனை அவருக்கே கட்டி வைக்கிறார் ராஜ்கிரண்.
கல்யாணம் ஆன அன்னைக்கே என்னோட ஆத்தாவைத் தவிர வேற எவங்கால்லேயும் நான் விழ மாட்டேன்னு முறுக்கு காட்டுறார் கார்த்தி. அதன்பிறகு மாமாவின் நல்ல மனசை புரிஞ்சுக்கிட்டு மனம் திருந்துறார்.
அந்த நேரத்துல கொம்பன் குடும்பத்துக்கே கொலைகாரக் குடும்பம் மூலமா உயிர் போகிற அளவுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வர எல்லாவற்றையும் முறியடித்து குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பதே கொம்பனின் கிளைமாக்ஸ்.
பருத்தி வீரனுக்குப் பிறகு மீண்டும் கிராமத்துப் பக்கம் போய் கதகளி ஆடிவிட்டு வந்திருக்கிறார் கார்த்தி. சிட்டி சப்ஜெக்ட்டுகளை விட கார்த்திக்கு சரியான ஏரியாவாக வில்லேஜ் கதைகள் அமைஞ்சிடுது. அப்படி ஒரு கதை தான் இந்தப்படமும். அவருக்கே உரிய கெத்து, எகத்தாளம், கிண்டல், கேலி, வீரம், கோபம்ன்னு எல்லா வகையான நடிப்புக்கும் தீனி போட்டிருக்கிறார்.
காலையில் எழுந்து சாமி கும்பிட்டவுடன் ஒரு குவார்ட்டர் பாட்டிலை எடுத்து கிளாசில் ஒரு கட்டிங்கை ஊத்தி கூடவே பொறித்த மீன் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு இந்தாப்பா இன்னையோட கோட்டா என்று கொடுக்கும் போது தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. என்கிட்ட எதுக்கு கேட்டுக்கிட்டு நீயா பார்த்து ஒருத்தனை கை கட்டினா நான் தாலி கட்டிக்கப்போறேன். எனக்கு நீ கூடவே இருக்கணும் அம்புட்டுத்தான் என்று சொல்லும் போது மெச்ச வைக்கும் மகளாக காட்சி தருகிறார்.
லட்சுமிமேனன் அப்பாவாகவும், கார்த்திக்கு மாமனாராகவும் வரும் ராஜ்கிரண் வழக்கத்தை விட இந்தப் படத்தில் நெகிழ வைக்கிறார். எங்கே மருமகனின் ஊர்ச்சண்டைகளால் தன் மகளின் வாழ்க்கை பாழாய்ப்போய் விடுமோ என்று தவிக்கும் போதும், அதே மருமகனிடம் அடிவாங்கி விட்டு எதுவுமே செய்ய முடியாமல் அமைதியாக நிற்கும் போதும் அவரை மிஞ்சுக்க ஆளே இல்லை என்று நிமிர்ந்து நிற்கிறார்.
கார்த்தியின் அம்மாவாக வரும் கோவை சரளா, வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன், மாரிமுத்து, மற்றும் சூப்பர் சுப்பராயனின் மகன்களாக நடித்திருப்பவர்கள் என படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே டம்மியாக இல்லாமல் கனமாக இருக்கின்றன.
சாமி இருக்கிற இடத்துக்கு ஜனங்க வந்தா பரவாயில்ல.., சாதில்லே கூட வருது அந்த இடத்துக்கு நான் எப்படி வருவேன் மாதிரியான ‘நறுக்’ வசனங்களை காட்சியமைப்புகளுக்கேற்ப படம் முழுக்க தூவி காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டுகிறார் டைரக்டர் முத்தையா.
ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் ‘கருப்பு நிறத்தழகி’ இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குட்டிப்புலி, கொம்பன் இரண்டு படங்களிலும் அருவாக்களின் வீச்சும், ரத்தத்தின் வாடையும் ஓவராகவே வீசுகிறது. அதை மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்த கொம்பனை குடும்பத்தோடு கொண்டாடலாம்.