குற்றமே தண்டனை – விமர்சனம்
RATING : 4/5
நீ செய்த குற்றத்துக்கு தண்டனை ஏதாவது ஒரு வழியில் உன்னை வந்தடைந்தே தீரும்! என்கிற உண்மையை உரக்கச் சொல்வதே இந்த ”குற்றமே தண்டனை!”
கண் குறைபாடு உள்ள ஹீரோ விதார்த்துக்கு அந்த குறைபாட்டை சரிசெய்து முழுமையான பார்வையைப் பெற சுமார் 5 லட்சம் வரை தேவைப்படுகிறது.
அதற்காக பணம் புரட்டும் முயற்சியில் இறங்குகிறார். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் கேட்டுப் பார்க்கிறார் தேறவில்லை.
இந்த சூழலில் தான் அவரது வீட்டுக்கு எதிரே குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு ஒரு இளைஞன் வந்து போவதைப் பார்க்கிறார்.
பூட்டிக் கிடக்கிற வீட்டுக்குள் என்ன நடக்கிறது? என்கிற சந்தேகத்தில் வீட்டுக் கதவை தட்டினால் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை செய்யும் அலுவலகத்தின் எம்.டியான ரகுமான் கதவை திறக்கிறார். அவரைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்க்கும் விதார்த்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி!
நான் கொலை செய்யவில்லை என்கிற ரகுமான் இங்கே பார்த்ததை சொல்லாமல் இருக்க உனக்கு பணம் தருகிறேன் என்கிறார். இதனால் போலீஸ் விசாரணையில் அவருக்கு முன்பு வந்து போன இளைஞனை கை காட்டி விடுகிறார் விதார்த். செய்யாத கொலைக்கு இளைஞன் தண்டனையை அனுபவிக்க செல்ல, அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதே யூகிக்கவே முடியாத கிளைமாக்ஸ்.
நடித்த படங்களில் பெரிதாக சம்பாதிக்கவில்லை என்றாலும் சம்பாதித்த பணத்தை வணிக சினிமாவாக தயாரிக்க விரும்பாமல் இப்படி ஒரு நல்ல கதையம்சத்தோடு உள்ள படத்தை தயாரிக்க முன்வந்த ஹீரோ விதார்த்துக்கு முதலில் கை குலுக்கல்களோடு மனம் திறந்த பாராட்டுகள்.
படம் முழுவதிலும் கண்குறைபாடு நோயுடன் வரும் விதார்த் அந்த குறைபாட்டை ரசிகர்களும் புரிந்து கொள்ளும் விதம் தனது இயல்பான நடிப்பால் மிகவும் எளிமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ட்ராபிக் ஹெவியான சாலையில் ஒவ்வொரு முறை டூவீலரில் போகும் போதும் அருகில் வருகிற வாகனங்கள் தாண்டிச் செல்கிற போது அவர் காட்டுகிற துடிப்பாகட்டும், சிக்னல்களை கிராஸ் செய்கிற போது காட்டுகிற பய உணர்ச்சிகளாகட்டும் அந்த இரண்டு விதமான உணர்வுகளும் துல்லியமோ துல்லியம்!
கண் பார்வையை சரி செய்ய ஒவ்வொரு முறையும் ஹாஸ்பிட்டலில் சொல்கிற பணத்தைப் புரட்டிக் கொண்டு போகும் போது நோயாளிகளிடம் மல்டி ஸ்பெஷாலிட்டி என்று சொல்லிக் கொள்கிற ஹாஸ்பிட்டல்கள் பணம் கறக்கும் அவலத்தை படம் பிடித்துக் காட்டியிருப்பது நெத்தியடி!
அவ்வப்போது முகம் காட்டுகிறார். காட்டுகிற அந்த சில நிமிடங்களிலும் நடிப்பை எக்ஸ்போஸ் செய்வதில் ஸ்கோர் செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இன்னொரு நாயகியான பூஜா தேவாரியாவுக்கும் விதார்த் வேலை செய்யும் அதே கலெக்ஷன் அலுவலகத்தில் தான் வேலை. நடுத்தர வீட்டுப் பெண்ணாக அதிக மேக்கப் இல்லாமல் எளிமையாக வருகிறவர் நடிப்பிலும் அதே எளிமை!
ரகுமான், தனியாக வசிக்கிற பணக்காரர் நாசர், இஸ்திரி கடை பெண்மணி, கொலையை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி மாரிமுத்து, வக்கீலுக்கு ஜூனியராக வரும் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம் என படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்களும் ஏதாவது ஒன்றில் நம்மை கவனிக்க வைத்து விடுகிறார்கள்.
முதல் காட்சியில் ஆரம்பிக்கிற இசைஞானியின் மனசை ஊடுருவிச் செல்லும் அந்த மெல்லிய இசை பல இடங்களில் சைலண்ட்டாக பரவி திரைக்கதையோடு நம்மை கிளைமாக்ஸ் வரை ஒன்றிப்போய் பயணிக்கச் செய்கிறது.
”நம்ம ரேட்டை நாம்தான் முடிவு பண்ணணும்”
”எது தேவையோ அதுவே தர்மம்” என ஒரு வரி வசனங்களில் தான் எத்தனை எத்தனை வீரியம்!
இயக்குநர் மணிகண்டன் தான் படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட!
விதார்த்துக்கு ஏற்பட்டிருக்கும் கண் குறைபாட்டை முழுமையாக ரசிகர்களுக்கு புரிய வைத்ததில் இவரின் கேமரா கோணங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதுதான் இயக்குநராக அவர் திரைக்கதையை கையாண்டிருக்கிற விதத்தில் நம்மை இருக்கையோடு கட்டிப்போட்டு ஜாலம் காட்டி மனம் கணக்கச் செய்கிற நேர்த்தி!