‘கோச்சடையான்’ கடன் விவகாரம் : லதா ரஜினிகாந்த்தை மிரட்டிய கார்ப்பரேட் குடும்பம்?!

Get real time updates directly on you device, subscribe now.

latha

‘கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து தனது தரப்பினை விளக்கி லதா ரஜினிகாந்த் சார்பில் அறிக்கை ஒன்றை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

அதில் கூறியிருப்பதாவது :

‘ஆட் பீரோ’ நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் அனைத்தும் பொய்யானவை. இது முழுக்க முழுக்க லதா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கு பங்கம் விளைவிக்கவும், இதன் மூலம் அவரிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் கொடுக்கப்பட்ட பொய்யான புகார். புகாரில் தெரிவிக்கப்பட்டது போல லதா ரஜினிகாந்த் எந்த கடன் தொகைக்கும் உத்தரவாதம் அளிக்கவில்லை.

ஆட் பீரோவைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாரும், அவரது மனைவியும் ஒரு வருடத்துக்கு முன் லதா ரஜினிகாந்திடமிருந்து பணம் கறக்க தவறான முறையை கையாண்டனர். பணம் தர லதா ரஜினிகாந்த் மறுத்ததை அடுத்து, ஊடகங்களிடம் அவரைப் பற்றி தவறான செய்திகளை அளித்தும், அவருக்கு மிரட்டல் விடுத்தும் சதி செய்து மேலும் அழுத்தம் தர ஆரம்பித்தனர். இதனால் அவரது பெயரும், அவரது குடும்பத்தினரது பெயரும் களங்கப்பட்டு விடும் என்பதால், அவரே முன் வந்து வாங்காத கடனை அடைப்பார் என எதிர்பார்த்தனர்.

இந்த தருணத்தில் லதா ரஜினிகாந்த் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தை அணுகி ஆட் பீரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார். ஆனால் லதா ரஜினிகாந்துக்கு எதிராக ஊடகங்களை சந்திப்பதை இந்த உத்தரவு தடுப்பதாக கூறி, அபிர்சந்த் மற்றும் அவரது மனைவி இணைந்து இந்தத் தடை உத்தரவை ரத்து செய்ய முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.

அதே வேளையில், லதா ரஜினிகாந்த் தொடுத்த வழக்கை உடைக்க, அவர் தங்களுக்கு அளித்த ஆவணங்கள் போலி என பலவிதமான தவறான குற்றச்சாட்டுகளை நஹார் தம்பதி அடுக்கினர். ஆனால் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதோடு இதை ஆதாரமாக வைத்து விதான் சௌதா காவல் நிலையத்தில் டிசம்பர் 2012-ல் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரவும் நஹார் தம்பதி முயன்றனர். ஆனால் அவர்கள் தரப்பில் ஆதாரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீஸ் அவர்களை எச்சரித்து புகாரைப் பதிவு செய்ய மறுத்துவிட்டது .

கர்நாடக நீதிமன்றம் புகாரை ஏற்க மறுத்து விட்ட நிலையில், தனிநபர் ஒருவர் உள்நோக்கத்துடன் புகார் அளித்துள்ளதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்று வழக்கு பதிவு செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அந்தப் புகாரில் உண்மை நிலை முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டுள்ளது.

அபிர்சந்த் மற்றும் அவரது மனைவி சன்சலின் புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது. தவறான நோக்கத்தில் லதா ரஜினிகாந்த் மீது அளிக்கப்பட்டிருக்கும் புகார் தான் இது. தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டிருக்கும் புகாருக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை பெற்று தருவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.