‘தமிழ் ராக்கர்ஸ்’ : இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கையை சீரழிக்கப் போகுதோ?

Get real time updates directly on you device, subscribe now.

திருட்டு விசிடியை விட ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் தான் இப்போதைக்கு தமிழ்சினிமாவின் பொது எதிரியாகியிருக்கிறது. புதுப்படங்கள் ரிலீசான கையோடு அதை இந்த இணையதளம் சட்டவிரோதமாக வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து வருகிறது.

அதிலும் ‘கபாலி’, ‘பைரவா’ போன்ற பிரமாண்ட படங்களையே அப்படத்தை தயாரித்தவர்களுக்கு சவால் விட்டு திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர்.

இருந்தாலும் இதுபோன்ற தடைகளையும் தாண்டி பெரிய படங்கள் பெரியளவில் பாதிப்பின்றி பாக்ஸ்ஆபிசில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ‘எஸ் 3’ படத்தை ரிலீசான அன்றே வெளியிடுவோம் என்று சொன்ன தமிழ் ராக்கர்ஸ்க்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆறு மாதங்களில் உன்னை உள்ளே தள்ளுவேன் என்று ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சூழலில் அவரைப் போலவே ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தால் என்னுடைய 10 வருட உழைப்பு சிதைந்து விட்டது என்று மனம் நொந்து கூறியிருக்கிறார் ‘லைட்மேன்’  என்ற படத்தின் கதாநாயகன் கார்த்திக் நாகராஜன்.

படப்பிடிப்புகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் லைட்மேன்களின் வாழ்க்கை தரம், மற்ற துறைகளைக் காட்டிலும் மிக மோசமாக உள்ளது, என்பதை கூறும் படமாக ‘லைட்மேன்’ என்ற படம் தயாராகியுள்ளது.

இதுபற்றி இப்படத்தில் நாயகனாக நடித்த புதுமுக நடிகர் கார்த்திக் நாகராஜன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தால் தன்னுடைய 10 ஆண்டுகள் உழைப்பே சிதைக்கப்பட்டு விட்டது என்று தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :

“எங்கள் படம், ’லைட்மேன்’ பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தால் பிப்ரவரி 9 அன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு விட்டது.

ஒரு குழுவாக நாங்கள் எங்கள் நேரம், முயற்சி, பணம் என இந்தப் படத்தை உருவாக்க முதலீடு செய்திருக்கிறோம். இதன் நோக்கம் எங்கள் திறமைகளை காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் இந்த மாதிரி சில சமூக பொறுப்பற்றவர்களின் செயல் எங்கள் கனவுகளை புதைத்து விட்டன.

இந்தப் படத்துக்காக நாங்கள் போட்ட முயற்சி மிக அதிகம். தற்போது நாங்கள் கைவிடப்பட்டு தனியாக இருக்கிறோம். யாரென்று தெரியாத சிலர் திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்கு தொல்லை கொடுத்து எங்களையும் மோசமாக பாதித்துள்ளனர். இந்தப் படம் மக்களாலும், ஊடகங்களாலும் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை சார்ந்தே எங்கள் தொழில்முறை வாழ்க்கை உள்ளது.

கதையின் நாயகனாக நான் நடித்துள்ள முதல் படம். 2005ம் ஆண்டிலிருந்து திரைத்துறையில் எனக்கான ஒரு இடத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சியும் காத்திருப்பும் இப்போது நசுக்கப்பட்டு விட்டது. எதிர்காலம் பிரகாசமாக இருந்து மக்கள் இந்த கள்ளத்தனத்தை ஆதரிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். நிஜமாக இது ஒருவரது தொழிலை பாதிக்கிறது” இவ்வாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் கார்த்திக் நாகராஜன்.