‘உத்தமன்’ யார்? ‘வில்லன்’ யார்? : லிங்குசாமி அதிரடி
”சென்னைக்கு வந்தபோது வெறும் நம்பிக்கையுடன் மட்டும் தான் வந்தேன். என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அப்படிப்பட்ட நான் இன்றைக்கு திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தயாரிப்பு, வினியோகம்னு இறங்கியிருக்கிறது சாதாரண விஷயம் இல்லை.
நான் சந்திக்காத பிரச்சனைகள் இல்லை. எல்லாப் பிரச்சனைகளையும், தடைகளையும் தாண்டித்தான் வந்திருக்கிறேன். எல்லோருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் தாண்டித்தான் ஜெயிக்க வேண்டும்.
இதுவரை என்னோட வாழ்க்கையில நடந்ததெல்லாம் பார்ட் – 1 தான். இனிமே நடக்கப்போறதெல்லாம் சண்டக்கோழி பார்ட் -2, கும்கி பார்ட் – 2, சதுரங்கவேட்டை – பார்ட் 2ன்னு எல்லாமே பார்ட்-2 தான்..” என்று கம்பீரமாகப் பேச ஆரம்பித்தார் இயக்குனர் லிங்குசாமி.
அவரது திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் படம் தான் ‘ரஜினிமுருகன்’. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் ‘உத்தம வில்லன்’ படம் ரிலீசான சமயத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், கடன் பிரச்சனைகள், ரிலீஸ் பிரச்சனைகள் என எல்லாவற்றையும் மனம் திறந்து பேசினார் லிங்குசாமி.
தொடர்ந்து அவர் பேசியதாவது :
‘கும்கி’ படத்தை ‘மைனா’ படம் வெற்றி பெறும் முன்பே கமிட் செய்து விட்டோம். விளம்பரம் பார்த்தே நம்பிக்கை வந்தது. இந்தப் படத்தையும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெளிவரும் முன்பே பேசி கமிட் செய்து விட்டோம்.
‘ரஜினி முருகன்’ படத்தின் கதை தியேட்டர் மூடில் ஜாலியாக இருந்தது. வாழ்க்கையில் நிறைய ‘உத்தம வில்லன்’கள் வருவார்கள். நீங்கள் இதே மனசோட இருங்கள் என்று பொன்பொன்ராமைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.
காலையில் மெரினா பீச் போனேன். ‘ரஜினி முருகன்’ பற்றி எந்த நினைப்பும் இல்லாமல் தான் போனேன். வழியில் தென்பட்ட ‘ரஜினிமுருகன்’ போஸ்டர்கள் பெரிய தெம்பாக புத்துணர்ச்சியாக இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு கஷ்டம் இருப்பது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது எனத்தோன்றியது.
என் படம் ‘ரன்’ படப்பிடிப்பு சமயம் ரஜினி சாரின் ‘பாபா’வும் நடந்தது முதன் முதலில் அப்போதுதான் எடிட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தேன். அப்போது ‘ரன்’ போஸ்டர்களை பார்த்து இருக்கிறார். ‘செம எனர்ஜியாக இருக்கிறது’ என்று கூறினார்.
உதவி இயக்குநராக சென்னையிலிருந்து நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் நான் மதிக்கும் உறவினரை வைத்து என்னிடம் சமரசம் பேசி மனதை மாற்றுவார்கள்.சினிமாவில் லட்சம் பேர் வருகிறார்கள். ஒருவன்தான் ஜெயிக்கிறான் உன்னால் முடியுமா என்பார்கள்.அப்போது அந்த ஒருவன் நான்தான் என்பேன்.
நான் சினிமாதான் என்பதில் உறுதியாக இருந்தேன்; நம்பிக்கையாக இருந்தேன்; பிடிவாதமாக இருந்தேன். ஒருநாள் குடும்ப ஜோதிடர் என்று ஒருவர் வந்தார். அவர் கூறினார். உன்னால் சினிமாவில் ஒரு பிரேம் கூட எடுக்க முடியாது என்று. அவர் சொன்ன மூன்றாவது மாதத்தில் ‘ஆனந்தம் படப்பிடிப்பு தொடங்கி விட்டேன்.
இன்றைக்கு நாலு படங்கள் தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். சினிமாவில் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் நான் ஒவ்வொரு தடவையும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். எனக்கு இந்த சோதனைகள் வந்தது ரொம்ப சந்தோஷம் தான். ஏனென்றால் நல்லவன் யார்? கெட்டவன் யார்? பக்கத்துல கூடவே நிக்குறவங்க யாரு? நெஜமானவங்க யாரு? ன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
படம் ரிலீசாகுமா? இல்லையா? என்கிற கவலை ‘ரஜினிமுருகன்’ டீமுக்கு வேண்டாம். அந்தக் கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு படத்தை மட்டும் முழுமையாக எடுத்து என்னிடம் கொடுங்கள். எப்படி படத்தின் ஆடியோ ரிலீஸ் திட்டமிட்ட தேதியில் ரிலீசானதோ அதேபோல படமும் திட்டமிட்ட தேதியில் ரிலீசாகும் என்றார் லிங்குசாமி.