மாநாடு- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் எலெக்‌ஷன் எப்படி பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துமோ அப்படியொரு பரபரப்பை கிளப்பிவிட்டது மாநாடு படத்தின் ரிலீஸ். சரி ரிசல்ட்? High success!

ஹாலிவுட் அடித்துத் துவைத்த டைம்லூப் கதைதான். ஆனால் அதை மசாலா கலந்து தமிழ் ரசிகனுக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு

துபாயில் இருந்து கோவைக்கு வரும் சிம்புவுக்கு இருக்கும் டார்கெட் தன் நண்பனான ப்ரேம்ஜியின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். எப்படி? ப்ரேம்ஜியின் லவ்வருக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி. அதை அவர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் நேரத்தில் அன்று கோவையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வரை கொல்ல ஓர் சதி நடக்கிறது. அதில் சிம்பு காலியாகிறார். அப்புறம்? சிம்பு மீண்டும் துபாயில் இருந்து நண்பனின் திருமணத்தை நடத்தி வைக்க வருகிறார். யெஸ் ஒரேநாள் அவர் மரணித்த பிறகு திரும்பவும் வருகிறது..அடுத்து என்ன? திரும்பி திரும்பி வந்தாலும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு திருப்பம் என பயணித்து முத்தாய்ப்பாக முடிகிறது படம்.

Related Posts
1 of 3

ஆளும் சரி ஆக்டிங்கும் சரி சிம்பு தனித்து தெறிக்கிறார். ஆக்‌ஷன் காட்சியில் அதகளம். அவருக்கு சற்றும் சளைக்காமல் வெளுத்து கட்டுகிறார் எஸ்.ஜே சூர்யா. பின்பாதி படத்தில் அவருக்குத் தான் ஸ்கோர். மேலும் படத்தில் மாஸ் காட்டும் இன்னொருவர் ஒய்ஜி மகேந்திரன். ப்ரேம்ஜி கல்யாணி, அஞ்சனா கீர்த்தி, என நீளும் நடிகர்கள் பட்டியலில் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

படத்தின் சவுண்டிங் வொர்க்கில் இருந்து சின்னச் சின்ன சிஜி வொர்க் வரை பார்த்துப் பார்த்து வேலை வாங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. வெல்டன் பிரபு! யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு படம் என்றால் மட்டும் ரூம் போட்டு அல்ல தனி வீடெடுத்தே வேலை செய்வார் போல. பின்னணி இசையில் பிச்சுட்டார். மங்காத்தாவிற்கு பிறகு ஒரு மாஸ் மொமெண்ட் தியேட்டரில். ஒளிப்பதிலும் ஹை குவாலிட்டி. இப்படியான கதையில் எடிட்டிங் வேலை எவ்வளவு பெரிதாக இருக்கும். எடிட்டர் சிறப்பாக கையாண்டுள்ளார். டைம்லூப் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது அது தனிரகம்.

முன்பாதியில் கொஞ்சம் நீளம் குறைவாக இருந்திருக்கலாம் அங்கங்கே கண்ணுக்கே தெரியாமல் வரும் இந்துத்துவ நெடிகளையும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். மத்தபடி மாநாடு நிச்சயம் பெரும் கூட்டத்தை ஈர்க்கும்! தமிழில் இப்படியான உலகத்தர முயற்சிகள் தொடர வேண்டும்!
4/5