‘மாயா’வின் வெற்றிக்காக காத்திருந்தேன் : ஆரி இப்போ ஹேப்பி…
பேய்ப்படம் என்றாலே காமெடியாகத்தான் இருக்கும் என்கிற மன நிலையோடு தியேட்டருக்கு வந்த ரசிகர்களை நிஜமாகவே மிரள வைத்து விட்டது சென்ற வாரம் ரிலீசான ‘மாயா’. அதுவே மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்திருக்கிறது.
அந்த வெற்றியை இன்று மீடியாக்களோடு பகிர்ந்து கொண்டது ‘மாயா’ டீம்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன், நடிகர்கள் ஆரி, அம்ஜத்கான், ஒளிப்பதிவாளர் சத்யா, படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், தெலுங்கில் ரிலீஸ் செய்த சி.கல்யாண் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். வழக்கம் போல நயன்தாரா வரவில்லை.
”’மாயா’ படத்தின் வெற்றி எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த முழுமையான வெற்றியை சுவைக்க தான் நான் வெகுநாட்களாக காத்துக் கொண்டு இருந்தேன். நான் மாயா படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம் ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள் என்று என்னிடம் வருத்தமாக விசாரித்தார்கள்.
அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மாயாவின் வெற்றி பதில் சொல்லி உள்ளது.
படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி. நேற்று தெலுங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்னை பார்த்த ஒருவர் நான் யார் என்பதை கண்டறிய முடியாமல் என்னை பார்த்து கொண்டே இருந்தார் பின்னர் சுதாரித்த அவர், “ நீங்கள் மயூரி படத்தின் நாயகன் தானே” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டு சென்றார். ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்த் மாயா படத்தை பார்த்து விட்டு புகழ்ந்து பேசியுள்ளது எங்களுக்கு மிக பெரிய பூஸ்ட் அப்பாக அமைந்துள்ளது. எல்லா ஆண்களோட வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் நயன்தாரா” இருக்கிறார் என்றார் ஹீரோ ஆரி.
படத்தின் தெலுங்கு விநியோகஸ்தர் கல்யாண் பேசும் போது, நான் மாயா படத்தை முதல் முறை பார்த்தவுடன் இந்த படத்தை நான் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மாயா திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் ஐந்தரை கோடியை வசூலித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும் என்றார்.
”மாயா படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்மூடித்தனமாக நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளார். மாயா படத்தை எடுக்கும் போது படத்தின் முடிவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறி தான் முடித்தேன். இப்போது எனக்கு இரண்டாம் பாகத்தை இவ்வாறு எடுக்கலாம் அவ்வாறு எடுக்கலாம் என்று புதுப்புது கதைகளை என்னை சந்திக்கும் பலர் கூறி வருகிறார்கள்.
அவர்கள் என்னிடம் இப்படி கதைகளை சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் பாகம் இரண்டை எடுப்பேன்” என்றார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.
இறுதியாக பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்கள் மாயாவின் வெற்றி எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், மன பலத்தையும் தந்துள்ளது. படத்தில் நயன்தாரா நடித்திருக்கா விட்டால் படம் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை என்றார்.