மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம் #MehandiCircus
RATING 3/5
மனசு முழுக்க காதலும், சில இளையராஜா பாடல்களுமாய் வந்திருக்கும் படம் தான் இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’.
தொண்ணூரு காலகட்டங்களில் இளையராஜா பாடல்களால் காதலை வளர்த்தவர்கள் அதிகம். அப்படி ஒருவர் தான் இந்தப் படத்தின் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ்.
ராஜகீதம் மியூசிக்கல்ஸ் என்ற பெயரில் பூம்பாறையில் கேசட் கடை ஒன்றை நடத்தி வருபவர். ஊரில் உள்ள அத்தனை இளவட்டங்களின் காதலுக்கும் சிச்சுவேஷன் பாடல்களை ரெக்கார்ட் பண்ணிக் கொடுப்பவர் இவர் தான்.
அதே ஊருக்குள் சர்க்கஸ் காட்டுவதற்காக ஒரு வடநாட்டு கூட்டம் வருகிறது. அந்தக் கூட்டத்தில் பளிச்சென்ற அழகோடு ரங்கராஜை ஈர்க்கிறார் நாயகி ஸ்வேதா திரிபாதி.
ஒருபக்கம் சாதிவெறி பிடித்த ஹீரோவின் அப்பா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இன்னொரு பக்கம் ”நான் சொல்றதை செஞ்சு காட்டிட்டு என் பொண்ணை கூட்டிட்டுப் போ” என்று பெண்ணின் அப்பா சவால் ஒன்றை வைக்கிறார். இரண்டையும் சமாளித்து காதலியின் கரம் கோர்த்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
உறுத்தல் இல்லாத முகமாக வரும் அறிமுக நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் படத்திலேயே பத்து, பதினைந்து படங்களில் நடித்தவர் போன்று முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து கதைத் தேர்வில் கவனம் செலுத்தினால் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம்.
வாயைத் திறந்து அதிகம் பேசவில்லை என்றாலும், ஹீரோவிடம் கண்ணாலேயே காதல் மொழி பேசுவதில் தேர்ந்தவராக இருக்கிறார் நாயகி ஸ்வேதா திரிபாதி. அந்த காதலை படம் பார்க்கும் ரசிகர்களிடத்திலும் கடத்துவது இன்னும் சுகம்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சாதி வெறி தலைக்கேறியவராக பயமுறுத்திய மாரிமுத்துவுக்கு இந்தப் படத்திலும் அதே டைப் கேரக்டர் தான். நடிப்பு வழக்கம் போல ஓ.கே ரகம் என்றாலும் அவருக்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம்.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கென்று தனித்து தெரிகிற ஆடை, உடல்மொழிகள் உள்ளிட்ட வித்தியாசங்களை சர்க்கஸ் கூடாரத்தில் இருக்கின்ற அத்தனை பேரிடமும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் நாயகியின் அப்பாவாக வருகிறவரும், கத்தியை வீசுபவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
பல படங்களில் வில்லனாக வரும் வேல.ராமமூர்த்திக்கு இதில் பாதிரியார் வேஷம். அவர் மூலமாக பாதிரியார்களின் இன்னொரு பக்கத்தை பார்க்கும் போது ”அடப்பாவிகளா…” என்றே சொல்லத் தோன்றுகிறது.
‘தேவ்’ படத்தில் கார்த்தியோடு படம் முழுக்க வந்த கடுப்பேற்றிய ஆர்.ஜே. விக்னேஷ் இதில் பரவாயில்லை ரகமாக காமெடி செய்திருப்பது ஆறுதல்.
பூம்பாறையின் செழுமையையும், வட நாட்டின் வறட்சியையும் எந்த பிசிரும் இல்லாமல் உயிர்ப்போடு ஒளியாக்கித்தி தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.
படம் முழுக்க அவ்வப்போது ”ஓ பாபா லாலி…” உட்பட பல இளையராஜாவின் பாடல்கள் நம்மை தாலாட்டுகின்றன. மிச்ச இடங்களில் ஒலிக்கும் ஷான் ரோல்டனின் மெல்லிய பின்னணி இசை மனசுக்கு இதம்.
”மனசுல இருக்கிறவன் தான் புருஷன்” என வாழ்க்கையின் யதார்த்தமும், ”இப்பத்தாண்டா தெரியுது தமிழனோட சொத்துகள் எல்லாம் எப்படி தேசியமயமாச்சு”? ன்னு என ராஜூ முருகனின் அரசியலும் பேசுகிற வசனங்கள் தெறிக்கின்றன.
முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் நகர்வேனா என்கிறது. அதை கவனித்து சரி செய்திருக்கலாம் அறிமுக இயக்குனர் ராஜூ சரவணன்.
அடுத்தடுத்த காட்சிகளை எளிதாக யூகிக்கக் கூடிய எந்த திருப்பமும் இல்லாத எளிமையான கதை தான். என்றாலும் உள்ளங்கை மெஹந்தியை பார்க்கும் போது எவ்வளவு மனசுக்கு இதமோ? அப்படி ஒரு அழகான இதமாக நம் மனசை வருடிச் செல்கிறது இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’.