மெர்க்குரி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 3/5

நடித்தவர்கள் – பிரபுதேவா, சனந்த், இந்துஜா, தீபக் ரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷான்க் புருஷோத்தமன், ரம்யா நம்பீசன் மற்றும் பலர்

இசை – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு

இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ்

வகை – த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 1 மணி நேரம் 48 நிமிடங்கள்

கார்ப்பரேட்டுகளின் இரக்கமற்ற பேராசையால் நிறுவப்படும் தொழிற்சாலைகள் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை படம் பிடித்துக் காட்டுவது தான் இந்த ‘மெர்க்குரி’.

சனந்த், இந்துஜா, தீபக், சஷாங்க், அனீஸ் ஆகிய ஐந்து நண்பர்களும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். மெர்க்குரி தொழிற்சாலையால் பாதிப்புக்குள்ளான காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளான இவர்களில் சனந்த்தும், இந்துஜாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமலேயே காதலிக்கிறார்கள்.

இந்துஜாவின் பிறந்தநாளன்று தனது காதலைச் சொல்லி விட வேண்டும் என்று அவளோடு காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார் சனந்த். கூடவே அவர்களது நண்பர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். ஒரு மலையின் உச்சியில் தனது காதலை சனந்த் இந்துஜாவிடம் சொல்ல அவரும் ஏற்றுக்கொள்கிறார்.

அந்த சந்தோஷத்திலேயே மீண்டும் வீட்டை நோக்கி வருகிறார்கள். வருகிற வழியில் காரின் ஹெட்லைட்டை அவ்வப்போது அணைத்து அணைத்து விளையாடுகிறார் சனந்த். அந்த விளையாட்டே அவர்களை ஒரு பெரிய பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறது. அதிலிருந்து ஐவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

Related Posts
1 of 235

முழுப்படமும் இந்த ஐந்து கேரக்டர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. என்றாலும் ஒவ்வொரு கேரக்டருக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நட்சத்திரத் தேர்வும் கேரக்டர்களை உள்வாங்கி  வெளிப்படுத்தியிருக்கும் உடல்மொழிகள் செம.. செம..!

நடனப் புயலாக கலக்கிய பிரபுதேவா முதல் முறையாக இந்தப் படத்தில் நடிப்புப் புயலாக மாறியிருக்கிறார். பார்வை தெரியாதவராகவும், சத்தங்களை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் உணர்ந்து கொள்பவராகவும் அசத்தியிருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு கதை பாழடைந்த தொழிற்சாலைக்குள் நகர்ந்தாலும் ஒவ்வொரு நகர்விலும் திகிலைக்கூட்டி நம்மை சீட்டோடு உட்கார வைத்து விடுகிறது பிரபுதேவாவின் சின்னச் சின்னதான பரபரப்போடு கூடிய ரியாக்‌ஷன்கள்.

சைலண்ட் படமாச்சே எப்படி காட்சிகளையும், வசனங்களையும் புரிந்து கொள்ளப் போகிறோம் என்று படம் பார்க்கும் முன்பாகவே கேள்வி எழுந்தாலும் அப்படி எந்தவித எரிச்சலும் இல்லாமல் மிக எளிதாக காட்சிகளோடு ஒன்றிப்போய் ரசிக்க வைத்து விடுகிறது கார்த்திக் சுப்புராஜின் நேர்த்தியான திரைக்கதை. தமிழில் சப் டைட்டில் போடுவது ரசிப்புக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

சனந்த் – இந்துஜாவின் காதல் எபிசோடு மெல்லிய இசையாக மனதை வருடிச் செல்கிறது. நண்பர்களாக வருகிற ஐந்து பேரும் நடிப்பில் கனகச்சிதம். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார் ரம்யா நம்பீசன்.

உயர்ந்த மலைப்பகுதிகள், திகிலைக் கூட்டும் மரங்கள், இரவு நேர ஒற்றையடிப்பாதை, தொழிற்சாலையின் உள் வடிவமைப்பு என பச்சைக் கலர் டோனில் பளிச்சென்று தெரிகிறது திருவின் ஒளிப்பதிவு.

படத்தில் யாருக்கும் வசனங்கள் இல்லை. இதனால் சைலண்ட்டாக நகரும் காட்சிகளில் அவ்வப்போது பின்னணி இசை பல இடங்களில் காதை கனக்க வைக்கிறார் சந்தோஷ் நாராயணன். சில இடங்களில் ஒலிக்கும் ரம்மியமான வயலின் இசை காட்சிகளோடு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒண்ணே முக்கால் மணி நேரப்படமாக டைட் எடிட்டிங் செய்து விறுவிறுப்புக்கு துணை நின்றிருக்கிறார் எடிட்டர் விவேக் ஹர்ஷன்.

தொலைத்து விட்ட ஐ பாடை தேடிச் செல்லும் நண்பர்களிடம் நான் காரிலேயே இருக்கிறேன் என்று இந்துஜா சொல்லிவிட்டு தனியாக இருக்கும் போதே அவருக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று நம்மால் அந்த திருப்புமுனைக் காட்சியை எளிதாக யூகித்து விட முடிகிறது. இதுபோன்ற சில திரைக்கதை தடுமாற்றங்களை தவிர்த்திருக்கலாம்.

மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என இயற்கை வளங்களை அழிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் தற்போதைய சூழலில் மெர்க்குரி மாதிரியான படங்கள் வரம் தான்.

இதுபோன்ற படங்கள் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே சமயம் ஒரு விழிப்புணர்வுப் படம் என்கிற நெடி தெரியாமல் த்ரில்லர் பிளஸ் ஜனரஞ்சக படமாகக் கொடுத்த விதத்தில் மீண்டும் தன்னை தேர்ந்த இயக்குனராக நிரூபித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.