மூணே மூணு வார்த்தை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

moone-review

பெண் இயக்குநர்களின் ஆளுமை என்பது தமிழ்சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்திலிருக்கிறது என்று சொல்லி விட முடியாது. அவ்வப்போது வருவார்கள். ஒன்றிரெண்டு படங்களோடு காணாமல் போய் விடுவார்கள்.

இருந்தாலும் அவர்களுக்கான இருப்பை அவ்வப்போது ஏதாவது ஒரு பெண் இயக்குநர் நினைவுபடுத்தத் தான் செய்கிறார்கள். இதோ வல்லமை தாராயோ, கொலை கொலயா முந்திரிக்கா ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மதுமிதாவின் இயக்கத்தில் ரிலீசாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் மூணே மூணு வார்த்தை.

இந்தப்படம் ரிலீசாவதற்கு முன்பு மூன்று வார்த்தைகளை வைத்து வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தார்கள். சரி ரசிகர்களை ஈர்த்ததா?

கதைக்குள் வருவோம்.

அம்மா, அப்பா இல்லாமல் தாத்தா எஸ்.பி.பாலசுப்ரமணியம் – பாட்டி லட்சுமியின் அரவணைப்பில் வளரும் ஹீரோ அர்ஜூன். இருக்கிற ஐடி வேலையை விட்டு விட்டு நண்பனுடன் ஜாலியாக ஊரைச் சுற்றி வருகிறான்.

ஒரே பேரப்பிள்ளை என்பதால் பாட்டி லட்சுமி அதிக பாசம் காட்டுகிறார். தாத்தா எஸ்.பி.பியோ அவனுக்கு பொறுப்பு வரவேண்டும் என்று எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார்.

ஒரு சூழலில் குடியிருக்கும் ப்ளாட்டில் நண்பனோடு சேர்ந்து சரக்கடித்து விட்டு பெரிய பிரச்சனை செய்ய, அதை பொறுக்க முடியாத தாத்தா அவனை வீட்டு விட்டு வெளியேறி நண்பனின் வீட்டில் தங்கச் சொல்கிறார்.

ரோஷத்தோடு கிளம்பும் அர்ஜூன் அங்கு நண்பனோடு சேர்ந்து ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என்று திட்டம் போடுகிறான். கூடவே அவன் வீட்டுக்கு அருகே இருக்கும் ஹீரோயின் அதிதி செங்கப்பாவையும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

அவன் நினைத்த மாதிரியே ஒரு பிசினஸ் ஐடியா தோன்றுகிறது. அதாவது நெருக்கமானவர்களிடம் பலரும் சொல்லத் தயங்குகிற நல்ல – கெட்ட விஷயங்களை தைரியமாக போட்டு உடைப்பது தான் வேலை. அதற்கு ஒரு ஃபெமண்ட்டை கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.

Related Posts
1 of 4

அப்படிப்பட்ட வேலையில் ஒரு வேலை அவர் காதலிக்கும் ஹீரோயின் அக்காவின் திருமணத்தை நிறுத்துகிற அளவுக்கு போய் விடுகிறது. இதை பின்னால் கேள்விப்படும் அதிதி அர்ஜூன் மீது கோபப்படுகிறாள். அந்த கோபம் இருவரின் பிரிவுக்கும் காரணமாகிறது.

அதன் பிறகு இருவரும் ஐ லவ் யூ என்கிற மூன்று வார்த்தைகளைச் சொல்லி ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா..? என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோவாக புதுமுகம் அர்ஜீன் நடித்திருக்கிறார். நல்ல இயல்பான நம் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு இளைஞரைப் போல எளிமையான கேரக்டரில் வருகிறார். வசனங்களை உச்சரிக்கும் போதும், சின்னச் சின்ன முகபாவனைகளை காட்டும் போதும் எந்த பதட்டமும் இல்லாமல் பிரதிபலித்திருக்கிறார்.

அவர் கூடவே நண்பராக வரும் வெங்கடேஷ் ‘மிஸ்டர் பீன்’ மாதிரி ரப்பர் முகத்தை வைத்துக்கொண்டு அவ்ளோ பெர்பார்மென்ஸ் செய்கிறார். ஹீரோ வரும் பெரும்பாலான காட்சிகளில் ஹீரோயினை விட இவர்தான் அவருடன் வருகிறார். இவர் வரும் காட்சிகள் உச்சபட்ச காமெடி என்று சொல்ல முடியாவிட்டாலும் லேசாகவாவது சிரிக்க வைப்பது ஆச்சரியம்.

ஹீரோயின் அதிதி செங்கப்பாவின் குழி விழும் கன்னத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாக வரும் இவருக்கு ரொமான்ஸ் காட்சிகள் கூட குறைவு தான்.

தாத்தா பாட்டியாக வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி இருவரின் ஜோடிப்பொருத்தமும் அபாரம்.

பழைய படங்களில் விசு வந்து போவாரே அப்படி ஒரு கெஸ்ட்ரோலில் வந்து போகிறார் கே.பாக்யராஜ்.

ஸ்ரீனிவாசன் வெங்கடேஷின் ஒளிப்பதிவில் இருக்கு ஈர்ப்பு கார்த்திகேயா மூர்த்தியின் பாடல்களில் இல்லை என்பது மிகப்பெரிய குறை.

ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர் மதுமிதா. பட் படத்தில் காமெடியென்று காட்டப்படும் காட்சிகள் எல்லாமே கிரேசிமோகன் டைப்பில் செமக் கடியாக இருக்கின்றன. அதையும் மீறி சில காமெடி டயலாக்குகளை யோசித்து சிரிப்பதற்குள் அடுத்த காட்சிக்கு நகர்ந்து விடுகிறோம்.

இப்படி திரைக்கதையில் வறட்சியான ஏரியாக்களை கொஞ்சம் கவனித்திருந்தால் மூன்று வார்த்தையில்லை. முண்ணூறு வார்த்தையில் பாராட்டியிருக்கலாம்.