நேர்கொண்ட பார்வை – விமர்சனம் #NerkondaPaarvai
RATING : 3/5
பல ஆண்டுகளாக ‘மசாலா’ வீட்டுக்குள் மாஸ் காட்டிக் கொண்டிருந்த அஜித் முதல் முறையாக எந்த ‘நெடி’யும் இல்லாத ஒரு ‘ராவான’ கதையை தேர்ந்தெடுத்து அவருடைய நடிப்பில் ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘நேர்கொண்ட பார்வை’.
காதலிக்கிற பெண்ணாக இருந்தாலும் கூட அவளுடைய விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்பதுதான் கதையின் சாராம்சம். ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தை தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத்.
ஸ்ரீரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா மூவரும் ஒரே வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள். ஒருநாள் பார்ட்டி ஒன்றில் மூவருக்கும் புதிதாக அறிமுகமாகும் ஆண் நண்பர்களில் ஒருவர் ஸ்ரீரத்தா ஸ்ரீநாத்திடம் அத்துமீறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் அவர் அவனை பாட்டிலைக் கொண்டு அடித்து விட்டு தோழிகளுடன் வெளியேறுகிறார்.
அரசியல் பின்புலம் உள்ள அந்த இளைஞன் அந்த மூன்று பெண்களையும் தன் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ், கோர்ட், கேஸ் என்று அலைய விடுகிறான். அவனிடமிருந்து வக்கீலான அஜித் மூன்று பேரையும் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
வழக்கமான அஜித் படமென்றால் மாஸான ஓப்பனிங் சீன் அல்லது பாடல்காட்சி இருக்கும். இதில் அப்படி ஒரு பில்டப்பெல்லாம் இல்லை. பத்து நிமிடம் கழித்து தான் எண்ட்ரி கொடுக்கிறார் அஜித். அமைதியாக உட்கார்ந்து கொண்டு பார்க்கிற எல்லோரையும் முறைத்துப் பார்ப்பது போல இருக்கிறார். ஆனால் அந்த அமைதிக்குப் பின்னால் ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் தான் வித்யாபாலன் உடனான ப்ளாஸ்பேக்.
இருந்தாலும் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காகவே இடைவேளையையொட்டி ஒரு அதிரடியான சண்டைக்காட்சி இருக்கிறது. நீளமான அந்த சண்டைக்காட்சி மட்டுமே அஜித் ரசிகர்களுக்கு அதிகப்பட்ச சந்தோஷம்.
இளைஞனால் பாதிக்கப்படும் பெண்களாக ஸ்ரீரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரி மூவரும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அதிலும் கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பில் அசத்தியிருக்கிறார் ஸ்ரீரத்தா ஸ்ரீநாத்.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் களையப்பட வேண்டுமென்பது சமீபகாலமாக சமூகத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களுக்கு அவர்களே ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறார்கள் என்பதையும் படத்தில் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
ஒரு பெண் திருமணத்துக்கு முன்பாக எத்தனை ஆண்களுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம். மது அருந்தலாம், தம் அடிக்கலாம், ஏ ஜோக் சொல்லி சிரிக்கலாம், தன்னை விட வயதானவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம், பார்ட்டிக்கு போகலாம், ஆண் நண்பர்களுடம் எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம், ஆனால் அவள் அனுமதித்தால் மட்டுமே அவளை ஆண் தொடலாம் என்று படம் காட்சிகளாக விவரிக்கும் முற்போக்கான கருத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
படத்தில் வருகிற சில காட்சிகளும், வசனங்களும் முகம் சுளிக்க வைப்பது போல இருப்பதால் இந்தப் படத்தை குழந்தைகளோடும், குடும்பத்தோடும் கண்டிப்பாக போய் பார்க்க முடியாது.
வித்யாபாலன் சம்பந்தப்பட்ட ப்ளாஷ்பேக் காட்சிகள் படத்துக்கு தேவையில்லாத திணிப்பு தான். ஆனாலும் வருகிற குறைந்தளவு காட்சிகளில் மனதில் நிற்கிறார் வித்யாபாலன்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நம் காதுகளை கவரவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒரு பெண் திருமணத்துக்கு முன்பாக எத்தனை ஆண்களுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம். மது அருந்தலாம், தம் அடிக்கலாம், ஏ ஜோக் சொல்லி சிரிக்கலாம், தன்னை விட வயதானவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம், பார்ட்டிக்கு போகலாம், ஆண் நண்பர்களுடம் எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம், ஆனால் அவள் அனுமதித்தால் மட்டுமே அவளை ஆண் தொடலாம் என்று படம் காட்சிகளாக விவரிக்கும் முற்போக்கான கருத்தை எத்தனை ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் சமூகக் கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முன் வந்திருப்பதை வரவேற்கலாம்.