ஒ காதல் கண்மணி – விமர்சனம்
‘கடலை’ப் போல சரக்கில்லாமல் இருக்குமோ என்று பயந்து கொண்டே படம் பார்க்கப் போனால் ‘அலைபாயுதே’ போல போல்ட்டான சமாச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார் மணிரத்னம்.
திருமணம் என்றாலே வேப்பங்காயை கடித்தது போன்ற உணர்வுடன் இருக்கிறார் ஹீரோ துல்கர். ஹீரோயின் நித்யாவும் அதே டைப் தான்.
இருவரும் சர்ச்சில் ரம்யாவுக்கு(விஜய் டிவி) நடக்கும் ஒரு கல்யாணத்தில் ஆதி, தாரா என்று பெயரைச் சொல்லி அறிமுகமாகிக் கொள்கிறார்கள்.
பிறகு அங்கேயே போன் நம்பரை வாங்கி இருவருக்கும் நெருக்கம் ஏற்பட, அதுவே இருவரும் ஒருகட்டத்தில் ஒரே வீட்டில் தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்துகிற அளவுக்கு போய் விடுகிறது.
சுவாசத்தின் மூச்சு முகத்தில் படுகிற அளவுக்கு நெருக்கத்தில் திளைக்கும் அவர்களுக்குள் அந்த வாழ்க்கை முழுவதும் வரும் செல்லச் சண்டைகள், நீயா நாயா ஈகோஸ், ரொமான்ஸ் பிறகு திருமண வாழ்க்கையின் யதார்த்தம் ஆகியவை தான் படம்.
துல்கர்சல்மான் ஒரு அபாரமான எண்ட்ரி. நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் தமிழ் ஹீரோக்களுக்கே சவால் விடுகிறார்.
நித்யாமேனன் எந்தப் படத்திலும் இல்லாத வகையில் இப்படத்தில் துல்கருடன் அதிகமாகவே நெருக்கம் காட்டியிருக்கிறார். ஆனால் அதை விரசம் இல்லாமல் படமாக்கித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
படத்தில் பாராட்டியே தீர வேண்டிய இன்னொரு இரண்டு முக்கியமான கேரக்டர்கள் பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் ஜோடி. உண்மையான அன்பும், அக்கறையும் திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கையில் தான் இருக்கிறது என்பதை இந்த ஜோடி வரும் காட்சிகள் எல்லாமே நெகிழ வைக்கும் காட்சிகளாக்கி அப்ளாஸ் வாங்குகிறார்கள்.
கடற்கரை, போர்வைகள், எலெக்ட்ரிக் ட்ரெய்ன் ஓரம், பறவைகள் பறப்பது என பிசியின் பல கேமரா கோணங்கள் மணிரத்னத்தின் முந்தைய படங்களை ஞாபகப்படுத்துகின்றன. அதே சமயம் மும்பையின் அழகை படமாக்கவும் தவறவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் எல்லாமே ஹலோ ட்யூன்ஸ் ரகம்.
இக்கால இளைஞர்கள் மத்தியில் பரவலாக காணப்படும் ‘லிலிங் டூகெதர்’ வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்களை புட்டு புட்டு வைப்பதோடு அதில் இல்லை உண்மையான சந்தோஷம், அதையும் தாண்டி திருமணம் என்கிற பந்தத்தில் தான் உண்மையான அன்பும், சந்தோஷமான வாழ்க்கையும் இருக்கிறது என்பதை நெத்தியடியாய் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.