பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை : பா.விஜய் புலம்பல்

Get real time updates directly on you device, subscribe now.

pa.vijay

காடும் காடு சார்ந்த இடத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஆரண்யம்’. இது ஒரு பரபரப்பான காதல் கதை.

இப்படத்தை ‘ஆஹா ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் ‘சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் என நான்கு நண்பர்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து, ஸ்ரீஹேமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குபேர்ஜி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ‘அன்னக்கொடி’ புகழ் சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம்:

இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷன் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் குபேர்ஜி பேசும்போது “நான் யாரிடமும் உதவியாளராகப் பணி புரியவில்லை .படங்கள் பார்த்தும் பல விதமான சினிமா நண்பர்கள் மூலம் பழகிய அனுபவங்கள் பெற்றும் சினிமா கற்றவன்.

இப்படம் காடு சார்ந்த காதல்கதை. புதியதளம். நிச்சயம் இப்படம் புதிய அனுபவமாக இருக்கும். நண்பர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் சொல்லும் ஆஹா ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் நினைவாக எங்கள் கம்பெனிக்கு அதையே பெயராக வைத்தோம். படக்கதை காதல் கதை தான். என்றாலும் இப்படம் உருவான விதம் கேட்டால் அது எங்கள் நட்பின் கதையாக இருக்கும். என்மேல் நம்பிக்கை வைத்து இப்படத்தைக் கொடுத்தார்கள்.

சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் 60 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறோம்.புதியதை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இதையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

கவிஞர் பா.விஜய் பேசும்போது “இப்போதெல்லாம் பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் என்னிடம் உதவியாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் இதில் பாடலாசிரியராக அறிமுகமாகி 4 பாடல்களை எழுதி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு படக்குழுவுக்கு நன்றி. இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”. என்றார்.