ஓ.பன்னீர் செல்வத்தின் துணிச்சலான பேச்சு! : என்ன சொல்கிறார்கள் திரையுலக பிரபலங்கள் ?
தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பமாக நேற்று இரவு முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் வெளிப்படையாகவே மோதம் வெடித்தது.
முதல்வர் பதவியிலிருந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி வற்புறுத்தி கடிதம் வாங்கப்பட்டது என்று சசிகலா மீதும், தமிழக அமைச்சர்கள் மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் பன்னீர்.
அவரின் இந்த துணிச்சலான பேட்டியைக் குறித்து திரையுலக பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
இதோ சிலரின் கருத்துகள் :
கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.
சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது.
ஆர்யா: சரியான நேரத்தில் துணிவான, சிறந்த பேச்சு ஓபிஎஸ் சார். பாராட்டுகள்.
அருள்நிதி: தைரியமான பேச்சு. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையை அறியச் செய்து, அவர்களிடத்தில் நேர்மையாக நடந்திருக்கிறார் ஓபிஎஸ்.
இசையமைப்பாளர் டி.இமான் : இதுதான் சிறந்த வழி. தமிழ்நாட்டு அரசியலில் நம்பிக்கையை துளிர்விட்டிருக்கிறது. சரியான இடத்தில் இருந்து, சரியான நேரத்தில், சரியான பேச்சு! நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. #OPS
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் : ‘கண்ணா சிங்கம் சிங்கிளாதான் வரும்!’ #OPS வீரப்பேச்சு. எங்களின் இதயத்தை வென்றுவிட்டீர்கள். ரகசியமாகப் புதைந்துகிடக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். #OPSsirappu
தயா அழகிரி : ஓபிஎஸ் இத்தனையையும் புதைத்து வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆகச் சிறப்பு முதல்வரே!எப்போது வேண்டுமானாலும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படாலாம். ஆனாலும் துணிவாகப் பேசியிருக்கிறார். #OPS #Modi தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை மோடி அலை.
குஷ்பு : திகைப்புடன் காத்திருக்கிறேன். ஓபிஎஸ் மவுனத்தைக் கலைப்பார் என்று நம்புகிறோம். போராட்டமா இல்லை வெறும் அஞ்சலியா? நாடகத்தின் முடிச்சு முழுமையாக அவிழட்டும். ஒரு தலைவர் உதயமாகிறார்.
சாந்தனு : தமிழ்நாட்டு அரசியலில் என்ன ஒரு திருப்பம். பன்னீரின் தைரியமான பேச்சு அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது!
இவ்வாறு சினிமா பிரபலங்களில் சிலர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பேட்டி குறித்து தங்கள் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள்.