பொன்மாணிக்க வேல்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.


படத்தின் டைட்டிலிலே சர்ச்சைக்குரிய ஒரு வழக்கை நியாயமாக நடத்திய காவல் அதிகாரியின் பெயர் என்பதால் படம் மீது இயல்பாகவே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்திருக்கிறார் பொன்மாணிக்க வேல்?

சென்னை கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓர் காஸ்ட்லியான வீட்டில் ஒரு கொலை. அந்தக் கொலை யாரால் நிகழ்த்தப்பட்டது. ஏன் நிகழ்த்தப்பட்டது? என்பவற்றை விசாரிக்க வருகிறார் பிரபுதேவா. அந்தக் கொலை குற்றத்தை அவர் விசாரிக்க விசாரிக்க பல திருப்பங்கள்..முடிவில் குற்றவாளி யார்? குற்றம் ஏன்? என்பதற்கு பதில் கிடைக்கிறது.

போக்கிரி விஜயை நகல் எடுத்திருக்கிறார் பிரபுதேவா. விஜய்க்காக பிரபுதேவா உருவாக்கிய மேனரிஜத்தை அவரே செய்யும் போது நமக்கு அலுப்புத் தட்டுகிறது. குறிப்பாக அவர் தெனாவெட்டாக நடந்து வருவதெல்லாம் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் போலவே இருக்கிறது. நிவேதா பெத்துராஜ் உதிரா பாடலில் கிறங்கடிக்கிறார். கொடுத்த கேரக்டருக்கு நியாயமும் சேர்த்திருக்கிறார். மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு கனமான கேரக்டர். சரியாக தாங்கியிருக்கிறார். சுரேஷ்மேனன் நடிப்பில் நிறைய நாடகத்தன்மை.

இமானின் பின்னணி இசையில் ரஜினி விஜய் பட சாயல் ஏகத்துக்கும். மாஸ் காட்ட வேண்டுமென மனிதர் வாசித்துத் தள்ளியிருக்கிறார். உதிரா பாடலும், வா தங்கம் பாடலும் கேட்கும் ரகம். ஒளிப்பதிவு படத்திற்கு உதவி செய்திருக்கிறது. எடிட்டர் முன்பாதி படத்தில் முக்கால் வாசியைக் கூட வெட்டியிருக்கலாம்.

ஒரு நல்ல திரைக்கதை நம்மை படத்திற்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். பொன் மாணிக்கவேல் அதை கடுகளவும் செய்யாமல் கடுப்பேத்துகிறது. படம் துவங்கி 30 நிமிடங்கள் வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே படம் நகர்வது பெரும் குறை. இரண்டாம் பாதியை மட்டும் விறுவிறுப்பை ஏற்றி சிலபல ட்விஸ்ட்களை காட்டி ஒப்பேத்தி இருக்கிறார்கள்.

2/5