‘புலி’ ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்! : உத்தரவாதம் கொடுத்த சிம்புதேவன்
பர்ஸ்ட் லுக் டீஸர் லீக், புகைப்படங்கள் லீக் என சில ஆரம்பக்கட்ட களேபரங்களுக்குப் பிறகு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது விஜய்யின் ‘புலி’ப்பட யூனிட்.
ஹீரோ விஜய், ஹீரோயின்கள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என நடித்தவர்கள் யாருமில்லாமல் முழுக்க முழுக்க டெக்னீஷியன்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் ”ஒரு நல்ல தருணத்தில் உங்களை சந்திப்பேன் என்று கூறியபடி எங்கள் தயாரிப்பாளர் ஷிபு தமீம் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் இவர்களுடன் இணைந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்துள்ளது.
இதுவரைக்கு நடந்தது எல்லாமே எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது, விஜய் சார் என்னையும், ஷிபு அவர்களையும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க சொல்லி அதில் நடிக்க ஒப்புக் கொண்டது. அதேமாதிரி சிம்புதேவன் சார் இந்த மாதிரி ஒரு அற்புதமான கதையை எடுக்க முன்வந்ததும் சரி எங்களால் நம்ப முடியாத ஒரு சந்தோஷமாகவே இருக்கிறது.
புலி படத்துல இதுவரை இணையாத ஒரு நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துக் கொடுத்தது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் என இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் படத்தின் கதைதான். புலி திரைப்படம் இதுவரை விஜய் படத்தில் இல்லாத ஒரு பிரம்மாண்டத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
ஸ்ரீதேவி மேடம் இந்த படத்துல நடிக்க நாங்கள் அழைத்த போது அவர் தமிழ் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தப்போவதில்லை என்று கூறினார். அதன்பின் போனி கபூரிடம் பேசி ஸ்ரீதேவியை சந்தித்து சிம்புதேவன் கதையை கூறிய பிறகு இந்த படத்தில் நான் நடிக்கவில்லையென்றால் அது தவறாகிவிடும் என்று கூறி புலி படக்குழுவுடன் இணைந்தார். அந்தளவுக்கு இந்த படத்தின் கதை இருக்கும்…
அடுத்ததாக புலி படத்துல ஆர்ட் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் இதற்கு கலை இயக்குநர் முத்தையா அவர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மஹதீரா, நான் ஈ படங்களுக்கு கிராஃபிக்ஸ் அனிமேஷன் செய்த கமல் கண்ணன் இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். புலி படத்தின் கிராஃபிக்ஸ் 6 நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார்.
இன்னொரு தயாரிப்பாளராக ஷிபு தமீம் பேசியதாவது,
‘புலி’ படத்திற்கான வேலைகள் 2014ம் ஆண்டும் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது, சிம்பு தேவன் படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்று செய்தி வெளியான அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் இணையதளங்களின் ஆதரவு என்னால் நம்ப முடியாதளவுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் இளைய தளபதி விஜய் அப்படியில்லையென்றால் ஒருவேளை பி.டி.செல்வகுமார் பத்திரிக்கையாளர்களிடையே வைத்திருக்கும் நல்லுறவாக இருக்கலாம் அதுவும் இல்லையென்றால் சிம்பு தேவன் பத்திரிக்கை துறையிலிருந்து வந்ததால் இருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் இந்த படத்தில் அவரை ஒளிப்பதிவு செய்ய வைக்கலாமா என்ற சந்தேகத்தில்தான் அவரை அணுகினோம். அவர் அப்போது படங்களில் நடிப்பதை முழுநேர வேலையாக செய்து கொண்டிருந்தார். விஜய் சார் படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு செய்யணும் என்று சொன்னதுமே ஒப்புக் கொண்டார் அவருக்கு நன்றி.
ஸ்ரீதேவி ஏற்கனவே பி.டி.செல்வகுமார் கூறியதுபோல ஆரம்பத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, அவரது கணவர் போனி கபூரை அலைபேசியில் அழைத்து அவரிடம் பேசி அதன்பின் ஸ்ரீதேவியை சந்தித்து கதையை கூறிய பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இதுவரை புலி படத்துக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு என் நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை என்று விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் பேசியதாவது ‘துப்பாக்கி’ படத்துல நான் ஒரு பாட்டுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்தேன் அப்போதே விஜய் சார் என்னை அழைத்து கூடிய விரைவில் ஒரு புதுமையான கதையம்சத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன் அந்த படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு என்று கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன்.
அதன்பின் ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து இயக்குநர் சிம்புதேவனிடம் கதையை கேட்க சொன்னார் நானும் கதையை கேட்டபின் இப்படி ஒரு சுவாரஸ்யமான கதையில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் புலி திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகியுள்ளது.
தயாரிப்பாளர்களை பற்றி நான் கூறியாக வேண்டும் 2015ம் ஆண்டு அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது புலி படம்தான். எனக்கு என்ன சாதனங்கள் வேண்டுமென்றாலும் அதனை உடனே வரவழைத்து கொடுத்தார்கள். 140 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடந்தது எந்தவொரு நாளும் யார் என்ன கேட்கிறார்களோ அது கிடைத்தது, யாருக்கும் இல்லை என்ற பதில் வந்ததேயில்லை. அந்தளவுக்கு பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் உறுதுணையாக இருந்தார்கள்.
அதன்பின் படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும்…
ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் பேசும்போது
சிம்புதேவன் படம் பன்றது எனக்கு வருத்தமா இருக்கு, இப்பகூட ஒருத்தர் உள்ள வரும்போது கேட்டாரு, நீங்க எப்படி செட்டு போடனும்னு சிம்புதேவன் வரைந்து கொடுத்துவாரா என்று கேட்டாரு, சிம்புதேவன் ஒரு ஓவியராக இருப்பதால் அப்படி கேட்டிருக்கலாம், ஆனால் எனக்கான வேலைகளில் அவர் எப்போதுமே தலையிட்டதே இல்லை, நான் செட்டை வரைந்து எடுத்துக் கொண்டு அவரிடம் காண்பித்தால் அதில் சின்ன சின்ன விஷயங்களை மாற்ற சொல்வாரே தவிர மற்றபடி எதுவுமில்லை. அந்தளவுக்கு எனக்கு வேலை சுதந்திரம் கொடுத்தார்.
பொதுவாக கலை இயக்குநர்களுக்கு சரித்திர கால படங்கள் அமைவது குறைவு, அப்படியே அமைந்தால் அதில் ஒரு வெறியுடன் வேலை செய்வார்கள். ஏனென்றால் மற்ற படங்களில் இருப்பதுபோல இல்லாமல் இதில் அதிகமாக கலை இயக்குநர்களின் பங்கு இருக்கும் அந்த மாதிரிதான் இந்த புலி படமும் எனக்கு அமைந்தது.
புலி படத்துல நிறைய புது விஷயங்களை செய்திருக்கிறேன், இதற்கு பக்கபலமாக இருந்தது ஒளிப்பதிவாளர் நட்ராஜ் மற்றும் கிராஃபிக்ஸ் கமல் கண்ணன் சார் அவர்களும்தான். இவர்கள் இரண்டு பேருடன் இணைந்து நான் பணியாற்றிய முதல் படம் இது.
அடுத்து இந்த படத்தின் பாடல்கள் எனக்கும் “ஏண்டி ஏண்டி” பாடல் மிகவும் பிடிக்கும், அனைத்து பாடல்களும் அற்புதமாக வந்திருக்கிறது அதற்கு மிகப்பெரிய நன்றியை தேவிஸ்ரீபிரசாத் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் சார் பற்றி சொல்லனும்னா இதுவரை அவர் இப்படி ஒரு கதையம்சத்தில் படம் பண்ணியதில்லை. இந்த படம் அவரது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். எனக்கு படம் திரையில் பார்க்க ஆசையாக இருக்கிறது.
மேலும் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவரும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பேசும்போது
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்னை பற்றி இங்கே பேசிய அனைவருக்கும் நன்றி அதுமட்டுமில்லாம உங்க எல்லோருக்கும் நல்ல மனசு இருக்கு. அதுமாதிரிதான் நல்ல மனசு இருக்குறவங்ககூட இணைந்து பணிபுரியும்போது அந்த படம் கண்டிப்பாக ஹிட்டாகும்..
முதல்ல இயக்குநர் என்னை வந்து பார்க்கும்போது இந்த படத்துல யார் யார் நடிக்கிறாங்க என்று கூறினார். விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் என்று கூறும்போதே நான் சொன்னேன் என்னய்யா கதைவிட்றியா இவங்க எல்லாரும் எப்படி ஒரே படத்துல நடிப்பாங்க என்று சந்தேகமாக கேட்டேன்.
ஆனால் இயக்குநர் சிம்புதேவன் கூறியது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, நான் சொன்ன அத்தனை பேருடைய கால்ஷீட்டும் தயாராக இருக்குன்னு சொன்னாரு… இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கும். இத்தனை பேரையும் ஒரே படத்தில் இணைத்த சிம்புதேவனுக்கு என் பாராட்டுகள்.
விஜய் சார் இந்த படத்துல நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். சிம்புதேவனின் கதைதான் எங்கள் எல்லோரையும் இணைய வைத்திருக்கிறது…
இயக்குநர் சிம்புதேவன் பேசும்போது ”ஒவ்வொரு முறையும் நான் சொல்றதுதான் இந்த புலி படம் நிஜமாகவே ரொம்ப ஸ்பெஷம் படம் எனக்கு. எனக்கும் சரி, செல்வகுமார் சாருக்கும் நீங்கள் தொடர்ந்து நல்ல ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து நான் என்னுடைய மிகப்பெரிய நன்றியை விஜய் சாருக்குதான் சொல்லனும், ஏனென்றால் ஆரம்பத்தில் இந்த கதையை நான் அவரிடம் கூறும்போது படத்தின் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
என்னுடைய தயாரிப்பாளர்கள் யார் என்று விஜய் சார் அறிமுகப்படுத்தும்போது இருந்த சுறுசுறுப்பு இன்றும் பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் இருவரிடமும் இருக்கிறது. இவர்கள் என்னுடைய டைரக்ஷன் டீமில் பணிபுரிபவர்கள் மாதிரி அத்தனை உதவிகளை செய்து கொடுத்தார்கள் அவர்களுக்கு என் நன்றி” என்றார்.