ராதாரவி வாய் ஒண்ணே போதும்? : நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் டீம் தோற்பதற்கு!
வாயைத் தொறந்தாலே வம்பு என்றால் அது நடிகர் ராதாரவி மட்டும் தான் போலிருக்கிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும் தனித்தனியாக போட்டி போட தீர்மானித்து அதற்கான ஓட்டு வேட்டையில் இறங்கி வருகிறார்கள்.
இரு அணியினரும் தங்கள் சார்பில் ஊர் ஊராகச் சென்று நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
ஆனால் இப்படி கிளம்பிப் போகிறவர்கள் போகிற இடத்தில் வாயை வைத்து சும்மா இருக்காமல் எதையாவது பேச அதுவே அந்த அணியின் தோல்விக்கு காரணமாகி விடும் போலிருக்கிறது.
ஏற்கனவே விஷால் அணியில் உள்ள மன்சூர் அலிகான் ”நாடக நடிகர்களை தரக்குறைவாகப் பேசினார்” என்று புகார் வர விஷால் அன்கோ மன்சூரை சீனில் வர விடாமல் அமைதியாக்கியிருக்கிறது.
அந்த அணியில் அப்படி என்றால் சரத்குமார் அணியில் உள்ள ராதாரவி, காளை போன்ற சீனியர் நிர்வாகிகள் முன்னணி நடிகர்களை தரக்குறைவாக பேசி தங்களுக்காக ஓட்டுகளை தாங்களே கெடுத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய ராதாரவி ”நான் அறிவாளிகளிடம் மட்டும் தான் கருத்து கேட்பேன். கமலுக்கு நான் செய்த உதவிகள் ஏராளம். அதையெல்லாம் அவர் மறந்து விட்டார்” என்று ஒருமையில் பேசினாராம்.
ராதாரவியின் இந்த பேச்சைக் கேட்ட சங்க உறுப்பினர்களில் சிலர் கடுப்பாகி அப்போதே கூட்டத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
தொடர்ந்து ராதாரவி அணியினர் சீனியர் நடிகர்களுக்கு மரியாதை கொடுக்காமல் நாசர், கமல், விஷால் போன்ற முன்னணி நடிகர்களையும் தரக்குறைவாகப் பேசினால் அவர்கள் ஓட்டுக்கு அவர்களே வைத்துக் கொள்ளும் ஆப்புதான் என்கிறார்கள் சில நடிகர் சங்க உறுப்பினர்கள்.
முன்னதாக ‘பாபநாசம்’ படத்தின் வெற்றிக்கு மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ”நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக என்னிடம் யாரும் கருத்து கேட்கவில்லை” என்று கமல் கூறியிருந்தார். அதற்குத் தான் ராதாரவி கமலை மேற்கண்டவாறு ஒருமையில் பேசினாராம் ராதாரவி.
ஆக மொத்தத்துல ராதாரவி வாய் ஒண்ணே போதும் போலிருக்கு, நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் டீம் தோற்பதற்கு!