கஷ்டப்படும் ரசிகர்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி! : இன்ப அதிர்ச்சி கொடுத்த லாரன்ஸ்!
எத்தனை நடிகர்கள் இந்த மனசு வரும் என்று தெரியவில்லை. இனி வந்தாலும் அதனை ஆரம்பித்த வைத்த மொத்த பெருமையும் நடிகர் ராகவா லாரன்ஸுக்குத் தான் போய்ச்சேரும்.
காஞ்சனா 2 படத்தின் மாஸ் வெற்றியைத் தொடர்ந்து இன்று தான் இயக்கி நடிக்கப் போகும் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா என்ற இரண்டு
புதிய படங்களின் பர்ஸ்ட் லுக்குகளை அறிமுக விழாவை நடத்தினார்.
இரண்டு படங்களைப் பற்றியும் பேசியும் பேசிக்கொண்டிருந்த லாரன்ஸ் அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள் எல்லோர் முன்னிலையிலும் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேடையில் அவருக்கு தயாரிப்பாளர் எஸ்.மதன் ஒரு செக்கை கொடுத்தார். அதை காட்டிப் பேசிய லாரன்ஸ் இந்த செக் எனக்கு அட்வான்ஸா கொடுக்கப்பட்ட 1 கோடி ரூபாய் செக். ஒருநாள் என்னோட காஞ்சனா படத்தோட ரிசல்ட்டை பார்க்கிறதுக்காக ஏ.வி.எம்.ராஜேஷ்வரி தியேட்டருக்குப் போனேன். அப்போ ஒரு அம்மா தன்னோட ரெண்டு பசங்களையும் படத்தைப் பார்க்க கூட்டிட்டு வந்து டிக்கெட் கெடைக்காம திரும்பி வந்தாங்க. அதுல ஒரு பையன் நான் படம் பார்த்தே ஆகணும்னு தரையில உருண்டு அழுதான்.
அப்போ அந்த அம்மா தன் முந்தானையில இருந்த பணம், கையில வெச்சிருந்த பணத்தையெல்லாம் போட்டு ப்ளாக்குல டிக்கெட் வாங்க முயற்சி பண்ணினாங்க. அவங்க கையில் அவ்ளோ பணம் இருந்த மாதிரி தெரியல. அப்போ நான் என்னோட முகத்தை மறைச்சுக்கிட்டு 100 ரூபாயை அவங்க கையில கொடுத்தேன். ரொம்ப தேங்க்ஸ் தம்பின்னு சொல்லிட்டு என்னை பார்க்கக் கூட நிக்காம தியேட்டருக்கு போனாங்க.
அப்போதான் எனக்கு தோணுச்சு. ரசிகர்கள் அவங்க கையில இருக்கிற காசை செலவழிச்சு நம்ம படத்தை பார்க்க வர்றாங்க. தயாரிப்பாளர்கள் எங்களை வெச்சு படமெடுக்கிறாங்க. ஆனா அவங்களுக்கே ரசிகர்கள் படம் பார்க்க வரப்போய்த்தான் பணம் வருது. அப்படிப்பார்த்தா உண்மையான முதலாளி ரசிகர்கள் தான். அப்படிப்பட்ட அவங்களுக்கு நாம ஏதாவது செய்யணும்னு நெனைச்சேன்.
அதனால தான் எனக்குள்ள ஒண்ணு தோணுச்சு… அப்துல்கலாம் அய்யா பேர்ல அப்துல்கலாம் காலடிச்சுவட்டில் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பிச்சு கஷ்டப்படுற ரசிகர்கள் 100 பேரோட குடும்பங்களுக்கு இந்த அட்வான்ஸ் பணத்தை கொடுக்கப் போறேன். அது மருத்துவ உதவியோ, கல்விக்கான உதவியோ எதுவாகவும் இருக்கலாம்.
உண்மையா கஷ்டப்படுற ரசிகர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வேன். அதுக்கு எல்லோரும் பக்க பலமா இருக்கணும் என்றார் லாரன்ஸ்.