ரஜினியை இயக்குகிறார் ‘மெட்ராஸ்’ ரஞ்சித் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

rajinikanth

‘லிங்கா’வைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் புதுப்படத்தை மெட்ராஸ் பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு.

ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து பைரவி படத்தை விளம்பரம் செய்தார்.

விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984 ஆம் ஆண்டு தயாரிப்பாளராகி ‘யார்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்து முதன்முறையாக இயக்கிய ‘புதுப்பாடகன்’ படம் உட்பட அவர் தயாரித்த பல படங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததே சூப்பர்ஸ்டார் ரஜினிதான்.

Related Posts
1 of 19

ரஜினி நடித்த ‘அண்ணாமலை’, ‘முத்து’, ‘பாட்ஷா’ ஆகிய படங்கள் உருவாகும் நேரத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் சூழல் இருந்தது, சில பல காரணங்களால் காலதாமதம் ஆனது.
ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி எஸ். தாணு தவம் இருந்தார்.

அவரது தவத்துக்குக் கிடைத்த வரமாக தற்போது, கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் பா.இரஞ்சித். ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.
கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். ‘மெட்ராஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
பாடல்கள் – கபிலன், உமாதேவி, கானா பாலா கலை இயக்கம் – ராமலிங்கம் படத்தொகுப்பு – பிரவீன் கே.எல். சண்டைப்பயிற்சி – அன்பு – அறிவு நடனம் – சதீஷ் ஒலி வடிவமைப்பு – ரூபன்

ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ரஜினியின் அடுத்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இந்தச் செய்தி ட்விட்டரின் சென்னை ட்ரெண்ட்டில் #Rajinikanth என்ற டைட்டிலில் முன்னணியில் வந்து நின்றது.