ரத்னம்- விமர்சனம்
ஹரி- விஷால் கூட்டணியின் மற்றொரு ஆக்சன் மேளா இந்த ரத்னம்!
திருநெல்வேலி தூத்துக்குடியில் அரிவாள் தீட்டிய ஹரி, இந்த முறை வேலூர் ஏரியாவையு ஆந்திரா பார்டரையும் அரிவாள் துப்பாக்கியோடு அணுகியிருக்கிறார். மார்க்கெட்டில் அனாதையாக வளரும் விஷால் ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியிடம் அடைக்கலம் ஆகிறார். அவர் அனாதை ஆனதிற்கு ஒரு கதை இருக்கிறது. ஆந்திரா பார்டரில் இருக்கும் பிரியா பவானி சங்கர் வேலூர் தோழி வீட்டிற்கு வரும்போது விஷாலை சந்திக்கும் சூழல் வருகிறது. தொடர்ச்சியான சந்திப்பில் நடக்கும் சில சம்பவங்கள் பிரியா பவானி சங்கருக்கு விஷாலை பாடிகாட் ஆக்குகிறது. அதற்கு ஒரு பின்கதை இருக்கிறது. பின் வில்லன்களுக்கு ஒரு பின்கதை. விஷாலின் வேர் எது என்பதற்கு ஒரு பின் கதை. இப்படி படத்தின் திரைக்கதையில் நிறைய பின்கதைகள்
தன் கேரக்டரின் பவர் உணர்ந்து நடித்துள்ளார் விஷால். ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் லேசான நாடகத்தனம் எட்டிப்பார்க்கிறது. பிரியா பவானி சங்கர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். சமுத்திரக்கனி பாசிட்டிவ் அரசியல்வாதியாக நடித்து படத்திற்கே ஒரு பாசிட்டி எனர்ஜியாக இருக்கிறார். வழக்கம் போல ஹரி பட வில்லன்கள் டம்மியாக வந்து போகிறார்கள் விஷாலிடம் அடிபட்டு சாகிறார்கள். யோகிபாபு காமெடி பல இடங்களில் கடுப்பு. மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் ஓகே. ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், கெளதம்மேனென் என நிறைய பெரிய ஆர்டிஸ்ட்ஸ் படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளனர்
பின்னணி இசை நம் காதுகளைப் பதம் பார்க்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவில் பிரம்மாண்டம் இருக்கிறது. ஆந்திர எல்லை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில் கேமராமேன் உழைப்பு அசாத்தியம். எடிட்டர் உழைப்பும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் பைட்டர்களின் உழைப்பும் சூப்பர் வைப்
கதையாகவும் திரைக்கதையாகவும் மிகவும் பழைய பார்மட்-ஐ கைக்கொண்டுள்ளார் இயக்குநர் ஹரி. யூகிக்க கூடிய காட்சிகள் தரும் அலுப்பை விட, அந்தக் காட்சிகளில் ஹரி நடத்தும் வெத்து ட்ராமா இன்னும் அலுப்பை ஏற்படுத்துகிறது. தாய்ப்பாசம் பற்றிய புரிதலிலும் ஹரியிடம் தெளிவில்லை. முந்தைய படத்தில் சில மெச்சூட்-ஆன விசயங்களை கையாண்ட ஹரி இப்படத்தில் அதற்கு நேர்மாறாக நிற்பது பெரும் சோகம்
ரத்னம்- கற்பனைச் சிக்கனம்
2.5/5