சீக்கிரம் படம் பண்ணுங்க… : கலக்கிய குறும்பட இயக்குநர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

kp-selva-1

ரு மணி நேரத்துக்குள் ‘அடடே…’ என்று ஆச்சரியப்படுத்தி விட்டார்கள் கே.பி.செல்வா, நவீன் முத்துசாமி என்கிற இரண்டு இளம் குறும்பட இயக்குநர்கள்.

சமீபத்தில் இவர்கள் இயக்கிய ‘ரவுடிசம்’, ‘ஹைக்கூ’ ஆகிய இரண்டு குறும்படங்கள் திரையிடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தேறியது.

இரண்டு படங்களுமே ஓடும் அதிகபட்ச நேரம் தலா 25 நிமிடங்கள் தான். ஆனால் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த அத்தனை பேரையும் படங்களைப் பற்றி மணிக்கணக்கில் சிலாகித்து பேசுகிற அளவுக்கு இயக்கத்தில் ஆச்சரியப்படுத்தியிருந்தார்கள்.

முதலில் கே.பி.செல்வா இயக்கத்தில் ‘ரவுடிசம்’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

சென்னையின் தர லோக்கல் ஏரியாவான வட சென்னையில் காலங்காலமாக நடந்து வருவது அரசியல் கொலைகள் தான் கதை.

சாதாரண வட்டச் செயலாளர் பதவி இரண்டு அரசியல்வாதிகளின் இலக்கு. அதற்காக எத்தனை கொலைகளையும் செய்யத் தயாராகும் அவர்கள் பதவியைப் பிடிப்பதற்காக ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்ய முயற்சிக்க அந்த போராட்டத்தில் ஜெயித்தது யார் என்பதே கதை.

படத்தில் வரும் பாலாஜி, தரணி, ஹரி, ராம் கோபால் என அத்தனை கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாக கொண்டு சென்று யதார்த்தமான படமாக தந்திருந்தார் செல்வா.

இதுக்காக எதுவும் ரிகர்சல் பார்த்தீங்களா..? கேட்டால் “ இல்ல சார்… யாருமே ரிகர்சல் எடுக்கல. போனோம்… 5 நாட்கள்ல மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்துட்டோம் என்று ஆச்சரியப்பட வைத்தார்.

மொத்தத்தில் ரெண்டடை மணி நேர முழு திரைப்படத்தை 25 நிமிடங்களுக்குள் மிக அழகாக செதுக்கியிருந்தார் செல்வா.

திரையிடல் முடிந்ததும் செல்வாவை நோக்கி வந்த முதல் வாழ்த்து இதுதான்.

சீக்கிரம் பெரிய திரையில படம் பண்ணுங்க…!

அடுத்த படமாக நவீன் முத்துசாமி இயக்கியிருந்த ‘ஹைக்கூ’ குறும்படம் திரையிடப்பட்டது.

அப்பா- அம்மா இல்லாமல் மாமாவின் அரவணைப்பில் வாழும் ஒரு அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை.

சிறு வயதிலிருந்தே நீச்சல் பழகுவதில் தீராத காதல் கொண்ட தம்பிக்கு உலக அளவில் நடக்கும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது கனவு.

அதற்கான முயற்சிகளில் இருக்கும் அவன் ஒரு சாலை விபத்தில் இரண்டு கைகளையும் இழந்து விடுகிறான். மாமாவோ ஊனமுற்ற தம்பியை வைத்து கஷ்டப்பட வேண்டாம். அதனால் அவனை கிணற்றி தள்ளி சாகடித்து விட்டு வா. என் மகளை உனக்கு கட்டிவைத்து நல்ல வாழ்க்கையை தருகிறேன் என்கிறார்.

அப்போதும் கூட தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தம்பியின் தன்னம்பிக்கை அண்ணனின் மனதை மாற்ற, நெகிழ்வோடு ”மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப்படம் சமர்ப்பணம்” என்கிற டைட்டிலோடு முடிகிறது படம்.

இந்தப் படமும் ஒரு 20 நிமிடங்கள் ஓடக்கூடிய படம் தான். அந்த  20 நிமிடங்களுக்குள் படம் பார்த்து விட்டு வரும் ஒவ்வொருவரின் மனசையும் முழுதாக கரைத்து விட்டுத்தான் அனுப்புகிறார் இயக்குநர் நவீன் முத்துசாமி.

நல்ல கதைகளை தேடிக்கொண்டு கையில் பணப்பெட்டியோடு காத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சீக்கிரமே இந்த இரண்டு இளைஞர்களின் எண்ணக்கதவுகளை திறப்பார்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லலாம்.

ஆல் தி பெஸ்ட் பிரதர்ஸ்!