சங்கத்தமிழன் விமர்சனம்
RATING : 2.5/5
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக மட்டுமே இருப்பது, மக்கள் தளபதியாக அவர் உயரவேண்டாமா என இயக்குநர் விஜய் சந்தருக்குத் தோன்றிய ஆழ்ந்த யோசனையின் காரணமாக உருவாகியுள்ளது சங்கத்தமிழன் படம்.
மக்கள் நலனில் அக்கறையுடைய நல்லவர் விஜய் சேதுபதி. அவரது அப்பாவான நாசரை, ஊரிற்குள் காப்பர் ஃபேக்டரி கொண்டு வர முட்டுக்கட்டையாக இருக்கிறாரெனக் கொன்று விடுகின்றனர். எப்படியாவது நம்மை நம்பிய மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக, அந்த காப்பர் ஃபேக்டரியை மூடிவிட வேண்டுமென்பது நாசரின் இறுதி ஆசை. தந்தையின் அவ்வாசையை விஜய் சேதுபதி எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
விஜய் சேதுபதி, இப்படத்தில் நடிப்பதை விட மாஸ் காடுவதிலேயே அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். விவேக் – மெர்வின் இசைத்துத் தள்ள, விஜய் சேதுபதியும் சகட்டுமேனிக்கு அனைவரையும் அடித்துத் தள்ளுகிறார். செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு இருந்தும், இயக்குநர் ஏனோ அந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பாதவர் போல் அத்தகைய காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு ஜம்ப் அடித்து, அடுத்த காட்சிகளுக்குத் தாவி விடுகிறார்.
சூரியுடனான காமெடிக் காட்சிகல் சரியாகக் கைகொடுக்கவில்லை. படத்தின் முதல் பாதி முழுவதும் சரியான நோக்கமற்று அலைபாயும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அவசரமாக ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்து அவசர கதியில், விஜய் சேதுபதியின் மாஸ் மூலம் அப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கின்றார் இயக்குநர். மக்கள் போராட்டம் தான் வெற்றிக்குக் காரணமென விஜய் சேதுபதி க்ளைமேக்ஸில் சொன்னாலும், படம் அந்தப் புள்ளியை எங்கும் தொடவே இல்லை. சம காலத்துப் பிரச்சனையை, அதன் உண்மைத்தன்மை மாறாமல் பதியாத விஜய் சந்தர், வழக்கமான மசாலா பாணியில் அதன் தீவிரத்தையும் குறைத்து விட்டுள்ளார்.
ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என படத்தில் இரண்டு கதாநாயகிகள். நாயகன் மீது காதலில் விழ ராஷி கண்ணாவும், மாமாவைத் தவிர தனக்கு வேறு உலகமில்லை என உருகும் அக்மார்க் கிராமத்துப் பெண்ணாக நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளனர். ராஷி கண்ணாவை விட, மரம், செடி, விவசாய நிலம் முதலியவற்றின் மீது காட்டும் அக்கறையாலும், அதற்காகப் போராடுவதாலும் நிவேதா பெத்துராஜ் ஸ்கோர் செய்கிறார். படத்தின் ஒரே உருப்படியான பகுதி, நிவேதா பெத்துராஜ் மேற்கொள்ளும் போராட்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், ‘பொம்பல நான் தைரியமா முன்னாடி நிக்கிறப்பவே தெரில, என் பின்னாடி ஒரு ஆம்பள இருக்கான்’ என்ற நிவேதா பெத்துராஜின் மூலம் இயக்குநர் வெளிப்படத்தும் ஆணாதிக்கப் பிற்போக்குத்தனத்தை எல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.
விஜய் சேதுபதி திரையில் வந்தாலே, இருக்குமத்தனை இசைக்கருவிகளையும் உச்சஸ்துதியில் அலறவேண்டுமென கண்டிஷனாக இசையமைப்பாளர்களிடம் சொல்லியிருப்பார் போல் இயக்குநர். வாசித்துத் தள்ளியுள்ளனர் இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்கும் மெர்வினும்.
கதை கோரும் பட்சத்தில் மாஸ் காட்டுவதற்குப் பதிலாக, ‘மாஸ் காட்டவேண்டும்’ என்ற ஒற்றை நோக்கத்தில் இயக்குநரால் நெய்யப்பட்ட கதையில் விஜய் சேதுபதி பொருந்தாமல் போகிறார். விஜய் சந்தர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், உண்மையிலேயே மாஸாக வந்திருக்க வேண்டிய படம் தான் இது.