ஸ்வேதாமேனன் இருக்காராம்! : அப்ப அதுக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாமே..!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்கிற ரெகுலர் குற்றங்களில் கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மிக எளிதாக நெருங்கி விட முடியும். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவது அரசாங்கங்களுக்கு பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது.
அதிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தவகைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது இன்னும் அதிகரிக்கும், குறையவே குறையாது என்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் சங்கர் மற்றும் சுரேஷ்.
கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், சுகன்யா, ஈரோடு மகேஷ் மற்றும் பலர் நடிப்பில் அனுகிரஹதா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் உமா சங்கர் தயாரித்திருக்கும் ‘இணையதளம்’ படத்தின் இயக்கியிருப்பவர்கள் இவர்கள் தான்.
”ஒரு புது விஷயம் வந்துச்சுன்னா அது நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அப்படித்தான் இணையதளத்தோட வளர்ச்சியில நல்லது, கெட்டது ரெண்டுமே இருக்கு. நாங்க அதுல நடக்கிற க்ரைமைப் பத்தித்தான் இந்தப் படத்துல காட்சிப்படுத்தியிருக்கிறோம். ஆனால் தீர்வைச் சொல்லல, அதை ரசிகர்களோட முடிவுக்கே விட்டுட்டோம்” என்கிறார்கள் ஜாக்கிரதையாக!
ஆமாம் சார், இப்போ இருக்கிற ஆடியன்ஸ் ரொம்பத் தெளிவா இருக்காங்க. அதனால அவங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி கண்டிப்பா இந்தப்படம் இருக்காது. இண்டர்நெட்ல கிரைம்கள் எப்படியெல்லாம் நடக்கும்கிறதைப் பத்தி சொல்லியிருக்கோம் என்றார்கள்.
இப்படிப்பட்ட விஞ்ஞான பின்புலம் கொண்ட கதைக்கு பாடல்களையும், வசனத்தையும் எழுதியிருக்கிறாராம் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா.
இண்டர்நெட் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகள் என்றால் கம்பீரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப்போடும் இருக்க வேண்டுமல்லவா? அந்தக் கேரக்டர்களுக்கு பொருத்தமாக உயர்ந்து வளர்ந்த கணேஷ் வெங்கட்ராம் கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக வருகிறார், அவரோடு கட்டுமஸ்த்தான உடலமைப்போடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருகிறாராம் ஸ்வேதா மேனன்.
ஸ்வேதா மேனன் வர்றாரா? அப்போ அதுக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாமே!