”சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்…” – பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பும் ஸ்ரீ ரெட்டி!
நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி, என்னை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர் என்று தெலுங்கு திரையுலகினர் மீது அதிரடி புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.
தற்போது அவரது புகார்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர்.சி உள்ளிட்ட தமிழ்த்திரைப்பட பிரபலங்கள் மீதும் திரும்பியிருப்பது கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீ ரெட்டி கூறிய புகார்களுக்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்களில் இயக்குனர் சுந்தர்.சி தவிர மற்றவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.
இருந்தாலும் ”தமிழ்ப்பட பிரபலங்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஸ்ரீரெட்டி கூறி வருகிறார். அவர் மீது யாரேனும் புகார் கொடுத்தால் நடிகர் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி.
ஆனால் இதுவரை யாரும் ஸ்ரீ ரெட்டி மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதற்கிடையே கடந்த சில தினங்களாக சென்னையில் இருக்கும் ஸ்ரீ ரெட்டி தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்து தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வருகிறார்.
தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி தான் சென்னை வந்ததாகவும், சில இயக்குனர்கள் தன்னை நடிக்க அழைத்திருப்பதாகவும் சொல்லும் ஸ்ரீ ரெட்டி ”ஆந்திராவில் என்னை ஏமாற்றியவர்கள் தொடர்பாக ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆந்திர அரசும் எனது புகார்களை கண்டுகொள்ளவில்லை. எனக்கு அங்கே பாதுகாப்பும் இல்லை.
அதனால் தான், நான் சென்னை வந்து விட்டேன். இங்கே எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நடிகர் சங்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். சங்க தலைவர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ஆதரவு கேட்பேன். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சென்னையிலேயே செட்டிலாகி விட திட்டமிட்டிருக்கிறேன்” என்றும் கூறுகிறார்.
சொந்த வீட்டிலேயே ஆதரவு கிடைக்காத நிலையில், சென்னையில் சில நண்பர்களின் துணையுடன் வசித்து வருகிறார். அதோடு பொருளாதார ரீதியாக தான் ரொம்பக் கஷ்டப்படுவதாகவும், தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும்” நெருங்கியவர்களிடம் சொல்லி புலம்பு வருகிறார்.