‘ஸ்ட்ராபெரி’க்கு புது கலர் கொடுத்த சமுத்திரக்கனி! : பா.விஜய் பரவசம்

Get real time updates directly on you device, subscribe now.

pa.vijay1

பாடலாசிரியர், நடிகருமான பா.விஜய் ‘ஸ்ட்ராபெரி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இரண்டு புதிய அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

அவரே தயாரித்து நடித்து இயக்கும் முதல் படமென்பதால் அப்படி ஒரு அர்ப்பணிப்போடு வேலை செய்திருக்கிறாராம்.

வரும் செப்டம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படமும் ஒரு பேய்ப்படம் தான். ஆனால் வழக்கமான பேய்ப்படமாக இருக்காது. அதிலிருந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான ரசனையைத் தர வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் சமுதாயத்துக்கு ஒரு நல்ல கருத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார்.

”ஒரு கால் டாக்சி டிரைவர் எதிர்பாராத விதமாக ஒரு பேயை சந்திக்கிறான். முன்பே அந்தப் பேயை சந்தித்த உணர்வு அவனுக்கு. அந்தப் பேய் ஒரு நல்ல மனிதரை அநியாயமாக கொல்ல முயற்சிக்கிறது. அந்தப் பேய் அப்படிச் செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் முக்கியமான சாராம்சம்” என்கிறார் இயக்குநர் பா. விஜய்

இயக்குநராக வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால கனவு. நான் பாடல் எழுதிய பல இயக்குநர்களுடன் அவர்களுடைய கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த அனுபவங்களையும், படங்களில் ஹீரோவாக நடித்த அனுபவங்களையும் வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறேன் என்ற பா. விஜய் படத்தில் சமுத்திரக்கனி வந்ததும் ஒரு புது கலர் கிடைத்தது என்கிறார்.

வேலையில்லா பட்டதாரி படம் ரிலீசாகி அவர் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருந்தார். அப்போது நான் என்னுடைய கதையை சொன்னேன். கேட்ட உடனே முதல்ல உங்க படத்தை நான் முடிச்சுக் கொடுத்துடுறேன்ன்னு சொல்லி ஒரே கால்ஷீட்ல நடிச்சுக் கொடுத்தார். அவர் வந்த பிறகு தான் படத்துக்கு புது கலர் கெடைச்சது. படத்துல நான் ஒரு சாதாரண கால்டாக்‌ஷி டிரைவரா வர்றேன். ரோபோ சங்கர் என்னோட சக கால்டாக்‌ஷி டிரைவரா வர்றார் என்றார்.

கதாநாயகியாக அவனி மோடி இதில் பேய்களை ஆராயும் விஞ்ஞானியாக வருகிறாராம் இவர்களுடன்தம்பி ராமையா, தேவயானி ஆகியோரும் இருக்கிறார்கள்.

படத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க இரண்டு விஷயங்கள் ஒளிப்பதிவும், இசையும் மாறவர்மனின் ஒளிப்பதிவு அப்படி ஒரு சப்போர்ட். அதேபோல இசையமைப்பாளர் தாஜ்நூரின் இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம். அவர் ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் கீபோர்டு பிளேயராக இருந்தபோது எனக்கு நண்பரானார். அன்றுமுதல் இன்றுவரை எங்கள் நட்பு தொடர்கிறது. ஒரு இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல நண்பராகவும் கிட்டத்தட்ட 2 வருடங்கள் என்னோடு பயணித்தார்.

என்றவர் மறக்காமல் ஒரு சமாச்சாரத்தை சொல்லி விட்டுப் போனார்.

இந்தப் படத்துக்கு ஸ்ட்ராபெர்ரின்னு ஆங்கில டைட்டில் வெச்சிருக்கேன். படத்தோட கதைக்கு அது பொறுத்தமான டைட்டிலா இருந்துச்சு. அதோட படம் ஒரு பேய்ப்படம்கிறதுனால எப்படியும் சென்சார்ல யு சர்ட்டிபிகேட் கிடைக்காதுன்னு தெரியும். அதனால் வரிச்சலுகையும் கிடைக்காதுன்னு தெரியும். இது தெரிஞ்சும் எதுக்கும் தமிழ்ல பொறுத்தமில்லாத டைட்டிலை வைக்கணும்னு யோசிச்சு பொருத்தமான இந்த டைட்டிலை வெச்சேன் என்றார்.

சபாஷ் சரியான முடிவு!