வீ.சேகர் மீது பழி விழுந்திருக்கிறது! : உண்மையை கண்டுபிடிக்க திரை உலகினர் வேண்டுகோள்!

Get real time updates directly on you device, subscribe now.

v.sekar1

பிரபல இயக்குநர் வீ.சேகர் சிலை திருட்டு வழக்கில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத தமிழ்த் திரையுலகம் சார்பில் தமிழக காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :

தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் இயக்குநரான திரு. வீ.சேகர், ஒரு நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்குச் சொன்னவர். அதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது திடீரென்று சிலை கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பழி விழுந்திருக்கின்றது. இதைக் கேட்டவர்களும், படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறீர்கள்.

இது திரையுலகை சார்ந்த எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துள்ளது. மேலும், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு. விக்ரமன் அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்களும் புழல் சிறைக்கு சென்று திரு. வீ.சேகர் அவர்களை சந்தித்தபோது, “இந்தக் குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை…” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

மேலும் தான் எந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும், எழுத்து மூலமாகவோ, வாய் மூலமாகவோ யாரிடமும் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தயவு செய்து உண்மையை கண்டுபிடிக்கும்படி தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக ஸ்காட்லாணட் காவல் துறைக்கு இணையான நமது மதிப்புமிகு தமிழக காவல் துறையை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தமிழ்த் திரையுலகம்