‘ஹெல்மெட்’ கட்டாயம்! : அசத்தும் அஜித் ரசிகர்கள்!
சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் கார் மற்றும் பைக் ஓட்டுவதில் பெருத்த ஆர்வம் கொண்டவர் ‘தல’ அஜித்.
அதோடு அரசு போடுகிற சட்ட திட்டங்களை வெகுவாக மதிப்பவர். தேர்தலில் ஓட்டுபோட மக்களோடு மக்களாக க்யூவில் நிற்பதாகட்டும், வருமான வரியை சரியாக செலுத்துவதிலாகட்டும் எல்லாவற்றிலும் ஒழுங்கை கடைபிடிப்பார்.
அப்படிப்பட்டவர் போக்குவரத்து விதிகள் விஷயத்தில் மட்டும் சும்மா இருப்பாரா என்ன?
இரவு 1 மணி ஆனாலும் ரெட் சிக்னல் போட்டிருந்தால் அது மீண்டும் க்ரீன் சிக்னலாக மாறும் வரை நின்று விட்டு அப்புறம் தான் காரை நகர்த்துவார். அதேபோல சீட்பெல்ட் போட்டுத்தான் காரை எப்போதுமே இயக்குவார்.
தற்போது வரும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து டூ-விலரில் பயணம் செய்யும் எல்லோருக்கும் ஹெல்மெட் கட்டயாம் என அரசு அறிவித்துள்ளது.
அதனை மக்கள் மத்தியிலே சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக அஜித் ரசிகர்களின் துணையோடு அஜித் ஹெல்மெட் போட்டுருப்பது போன்ற புகைப்படங்களை ‘அறிவிப்பு பலகை’யில் வைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு கோவையில் வைக்கப்பட்டிருந்த ( பார்க்க படம் ) இந்த அறிவிப்பு பேனர் அதை கடந்து போகும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் ட்விட்டரிலும் அஜித் ரசிகர்கள் #HelmetAwarenessByAJITHFans என்ற பெயரில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட்டிங்கிலும் கொண்டு வந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
எல்லா விஷயத்திலும் பிரபல நடிகர்களை பின்பற்றும் ரசிகர்கள் இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு விஷயத்திலாவது அஜித் ரசிகர்களை பின்பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
ஆக மக்களிடையே ஹெல்மெட் விழிப்புணர்வு விஷயத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் அஜித் ரசிகர்களை அடிச்சிக்க ஆளே இல்ல…!!! என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.