‘தனி ஒருவன்’ வெற்றி தான் என் அண்ணனின் முதல் சந்தோஷம்! : கண் கலங்கிய ஜெயம் ரவி

Get real time updates directly on you device, subscribe now.

jayam-ravi-1‘தனி ஒருவன்’ சக்சஸ் சந்திப்பை நெகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றியிருந்தவர் ஹீரோ ஜெயம் ரவியும், அவருடைய அண்ணனும் இயக்குநருமான மோகன் ராஜாவும்!

தனி ஒருவன் ரிலீசுக்கு முன்புவரை தன்னை எப்படியெல்லாம் சினிமாவில் பார்த்தனர் என்கிற தனது வலிகளை சந்தோஷத்தில் கண் கலங்கிய படியே வெளிப்படையாக பேசினார் இயக்குநர் மோகன் ராஜா.

”இப்படி ஒரு வெற்றியை அனுபவிக்க எந்த ஒரு இயக்குநரும் வரம் வாங்கி வந்திருக்கணும். அப்படித்தான் எனக்குத் தோணுது. ரசிகர்கள் கொடுத்த வரம் இது. திரிசொர்க்கம் மாதிரி 12 வருஷமாக வாழ்ந்துக்கிட்டிருந்தேன்.

நான் பூமியில இருக்கிறேனா? ஆகாயத்துல இருக்கிறேனா? நல்ல டைரக்டர்னு சொல்றானுங்க.. பாதி பேர் இல்லேங்குறானுங்க.. என் வாழ்க்கையில என்ன நடக்குது? இதை ரசிக்கிறதா வேண்டாமா? நான் இயக்குநரா இல்லையா? இப்படி டைப்பு டைப்பா கேள்வி கேட்டுக்கிட்டிருந்தாங்க..

அதையெல்லாம் மனசுல ஏத்திக்காத… வேலையை மட்டுமே பாரு. அதுதான் எனக்கு நானே சொல்லிக்கிட்டது, செய்றதை ஒழுங்கா செய். வரவேண்டியது தானா வரும். இது எனக்கு என் அப்பா சொல்லிக்கொடுத்தது.

முதல் நன்றி அவருக்குத்தான். ஒரு நல்ல சினிமாவுக்கான ரசனையையும் அவர் தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார். அதுக்கு நன்றிக்கடனாத் தான் இந்தப்படத்துக்கு என்னோட பெயரை மோகன் ராஜான்னு வெச்சுக்கிட்டேன். நான் சாதிச்சிட்டேன்ன் எனக்கு தோணுச்சு.

நேத்து குறும்படம் எடுத்துட்டு வர்றவனை நம்புறாங்க… சினிமாவுலேயே பொறந்த வளர்ந்த என்னை யாருமே நம்பல… அந்த வருத்தம் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு. அதை செயல்ல காட்டி நிரூபிச்சிட்டேன்.

12 வருஷம் ஆகியும் இன்னைக்கு நான் ஒரு அப்டேட்டட் படம் கொடுத்திருக்கிறதா எல்லாரும் சொல்றப்ப சந்தோஷமா இருக்கு. ரசிகர்கள் கொடுத்த இந்த ஆதரவு இன்னும் நல்ல படங்களை கொடுக்க என்னை தூண்டியிருக்கு” என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து கண்கலங்கிய ஜெயம் ரவி நான் அழ மாட்டேன் என்று சிறுபுன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

எனக்கு 12 வயசுல அரங்கேற்றம் நடந்துச்சு. அதைப்பார்த்து ஒரு வாரமா அதைப்பத்தியே பேசிக்கிட்டிருந்தார். இத்தனை வருஷமா நான் ஜெயிச்சி என் அண்ணன் சந்தோஷப்படுற நெலைமை தான் இருந்துச்சு… அவருக்குன்னு தனிப்பட்ட சந்தோஷமே இதுவரைக்கும் இருந்ததில்லை.

‘தனி ஒருவன்’ ரிலீசான முதல் நாள் தான் உண்மையா மனசாரா நான் என் அண்ணனைப் பார்த்து சந்தோஷப்பட்ட நாள் .

எல்லோரும் அவரை ‘ரீமேக் ராஜா’ன்னு கேலியாப் பேசுவாங்க. அப்பல்லாம் நான் மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன். ஒருநாள் என் அண்ணன் வருவார். பெரிய ஹிட் கொடுப்பார், அன்னைக்கு நாங்க உங்களைப் பார்த்து சிரிக்கிறோம்னு. அந்த நாள் வரும்னேன். வந்துடுச்சு.

தனி ஒருவன் ரிலீசுக்கு முன்னாடி எங்க குடும்பத்துலேயும் ஒரு சீரியஸ் பிலிம் டைரக்டர் இருக்காருன்னு சொன்னேன், இன்னைக்கு அதை நிரூபிச்சிட்டார். என்றார் ஜெயம் ரவி.