திலகர் – விமர்சனம்
காலம் காலமாக தேவர் சமூகத்துக்குள் இருந்து வரும் வீச்சரிவாள், வெட்டுகுத்து, வீராப்பு, வஞ்சம், பழிக்குப் பழி என சாதிய வன்மங்களை கைவிடச் சொல்லி கதறும் படம் தான் இந்த திலகர்.
அருவாளை நம்பினது போதும், நம்மளோட வருங்காலத் தலைமுறைகள் அறிவை மட்டுமே நம்பி நல்ல வாழ்க்கை வாழட்டும் என்கிற நல்லெண்ணம் கொண்டவர் நெஞ்சு நிமிர்த்தி வலம் வரும் கிஷோர்.
அவரது தம்பி துருவாவோ அதற்கு ஆப்போசிட். கோழி தலையை திருகும் போது வரும் ரத்தத்தைப் பார்த்தே ஓட்டமெடுப்பவர். அப்படிப்பட்டவரை ஹீரோயின் மிருதுளா ஒருபக்கம் லவ்வுகி்றார்.
கிஷோரின் அமோக வளர்ச்சி அதே சமூகத்தைச் சேர்ந்த பக்கத்துக்கு ஊர்க்காரரான பூ ராமுக்கு எரிச்சலைத் தருகிறது. அந்த வளர்ச்சியை தடுக்க திட்டமிடும் அவர் தன் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் கிஷோர் ஊர்க்காரர்களிடம் பிரச்சனையை கிளப்புகிறார்.
விவகாரம் கலெக்டரிடம் போக அவரோ தியேட்டருக்கு சீல் வைக்கிறார்.
இதனால் கோபத்தின் எல்லைக்கே போகும் பூ ராமு தன் மகன்களை வைத்து கிஷோரை போட்டுத் தள்ளுகிறார்.
அண்ணன் போய் விட்டால் அந்த இடத்தை தம்பி தானே நிரப்ப வேண்டும். அண்ணனின் சாவுக்கு காரணமானவர்களை பழி வாங்க ஆவேசம் வந்தவராக புறப்படுகிறார் துருவா.
பழிக்குப் பழி தொடர்ந்ததா? இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.
முறுக்கு மீசையும், நெஞ்சை நிமிர்த்தி கம்பீர நடை காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். எந்த கேரக்டரை கொடுத்தாலும் அல்வா சாப்பிடுவதைப் போல தோதாக்கி யதார்த்தம் காட்டுகிறார்.
அவரது பக்கத்து ஊர் பகைவராக வரும் ‘பூ’ ராமு சரியான பகைவன். அவரது கோபப்பார்வையே ஆயிரம் ஆஸ்கார் அவார்டுகளை வாங்கலாம். அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு.
ஹீரோவாக வரும் புதுமுகம் துருவா அப்பாவி, ஆக்ஷோரம் என டபுள் டக்கர் பயணத்தில் அடடே ஒரு நல்ல ஆக்ஷன் ஹீரோ இண்டஸ்ட்ரிக்கு கெடைச்சிட்டார் என்று சொல்ல வைக்கிறார்.
படம் முழுக்க கிஷோர், பூ ராமு, துருவா என மூன்று பேர்களை மட்டுமே சுற்றி நகர்வதால் ஹீரோயின் மிருதுளாவுக்கு அவ்வளவாக வேலை இல்லை.
கனமாக கேரக்டரில் தாலியறுக்கும் காட்சியில் அதிர வைக்கிறார் அனுமோல்.
தெற்கத்தி சீமையில் மண் வாசனையை அப்படியே அள்ளிக் கொண்டு சிலிர்க்க வைக்கிறார் கேமராமேன் ராஜேஷ் யாதவ்.
கண்ணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓ.கே
ஒரு உண்மைச் சம்பத்தை சொல்ல வேண்டுமென்றால் அது சம்பந்தப்பட்ட காட்சிகளையும் காட்ட வேண்டும் என்பதால் படம் முழுக்க ரத்தம், ரத்தம் ரத்தம் இதைத்தவிர வேறில்லை.
தென் மாவட்டங்களில் காலம் காலமாக இருந்து வரும் பழிக்குப் பழி மோதலுக்கு முடிவு கட்ட இயக்குனர் காட்டியிருக்கும் கிளைமாக்ஸ் வரவேற்கத்தக்கது மட்டுமில்லாமல் பாராட்டுக்குரியதும் கூட.