பாலிவுட்டுக்கு போனார் சஞ்சனா சிங் : அடடே… ஆச்சரியக்குறி!
மீடியாக்கள் என்றாலே ஓட்டமெடுக்கும் நடிகைகள் மத்தியில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தைரியமாகவும், வெளிப்படையாகவும் அவர்களுடன் நல்ல நட்புடன் இருப்பார்கள்.
தங்கள் சினிமா கேரியரில் எந்த ஒரு சந்தோஷ தருணங்கள் வந்தாலும் அதை மீடியாக்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்களுக்கு அலாதி ப்ரியம்.
அப்படிப்பட்ட நடிகை தான் சஞ்சனா சிங்.
தமிழில் ரேனிகுண்டா படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து விஞ்ஞானி உட்பல பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், சில படங்களில் ஒரே ஒரு பாட்டுக்கு ஐட்டம் சாங் ஆடுபவராகவும் என பிஸியாக இருக்கும் அவருக்கு ஹிந்திப்பட வாய்ப்பு வந்தால் அந்த சந்தோஷத்தின் அளவை சொல்ல வேண்டுமா என்ன? திக்குமுக்காடிப்போனவர் உடனே அந்த ஹிந்திப்பட டீமை சென்னைக்கு கூட்டி வந்து மீடியாக்களை சந்திக்க ஏற்பாடு செய்து விட்டார்.
எந்த வாய்ப்பாக இருந்தாலும் சிறுசு பெருசு என்று பாராமல் தொடர்ந்து தன் இருப்பை காட்டி வரும் சஞ்சனா சிங் ஹிந்தியில் நடித்திருக்கும் படம் ‘தோடா லுஃப்ட் தோடா இஷ்க்.’
தமிழில் இதற்கு கொஞ்சம் காதல் கொஞ்சம் ஜாலி என்று அர்த்தமாம். சச்சின் குப்தா என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதோடு, பரத் பன்சால், விவேக் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து தயாரித்தும் இருக்கும் படம் இது .
ஹிந்தியில் பல படங்களில் ஹீரோவாகவும் காமெடியனாகவும் நடித்த ராஜ்பால் யாதவ், ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்கள் நடிகரும் சினிமா நடிகருமான ஹித்தேன் தேஜ்வானி மற்றும் சுஷ்மிதா முகர்ஜி, நேஹா பவர், நம்மூர் நடிகர் ரியாஸ்கான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
”நான் ஒரு படத்தின் செகண்ட் ஹீரோயினாக நடித்தேன். ஒரு படத்தில் ஐட்டம் சாங் ஆடினேன். அதனால் என்னை ‘ஐட்டம் சாங்’ நடிகை என்று யாரும் முத்திரை குத்தக் கூடாது. நான் வில்லியாகவும் நடிப்பேன். காமெடியாகவும் நடிப்பேன். ஹீரோயினாகவும் நடிப்பேன். நான் ஒரு நடிகை. அதுதான் முக்கியம்” என்றார் நம்பிக்கையோடு!