வந்தா மல – விமர்சனம்
பக்கா லோக்கலான பி அண்ட் சி ஏரியாக்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதற்குள் தனித்த அடையாளமாக வந்திருக்கிறது இந்த ‘வந்தா மல…’
டைட்டில் கார்டில் இருந்து படம் முடிகிற வரை எல்லாமே தர லோக்கல். லாஜிக்கையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் கதை போகிற போக்கில் சுவாரஷ்யமான காட்சிகளுடன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் இகோர்.
சேத்துப்பட்டு குப்பத்தில் வசிக்கும் ஹீரோ தமிழ் உட்பட நான்கு இளைஞர்களுக்கு முழுநேர வேலையே செயின் அறுப்பது தான். இரண்டு டூவீலர்களில் ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு கிளம்புவார்கள். ஏரியாக்களை ஒரு ரவுண்டு வருவார்கள். கண்ணில் படுகிற பெண்கள் செயினை அசால்ட்டாக அத்துக் கொண்டு போய் விடுவார்கள்.
இப்படி திருடும் நகைகளை வைத்து சம்பாதிப்பது, சரக்கடிப்பது இதுதான் தொழில். அப்படி அடித்து வருகிற ஒரு செயினில் என்னை காப்பாற்றினால் உங்களுக்கு 2 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ஒரு சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பேப்பரில் தகவல் சொல்ல, நால்வருக்கும் குஷியோ குஷி. எப்படியாவது அந்த 2 கோடியை நாம் வாங்கி விட வேண்டும் என்று அந்த செயின் வந்த ரூட்டுலேயே தங்களை நகர்த்திக் கொண்டு போக, இந்த ஓட்டத்தில் ரைஸ்மில்லில் வேலை பார்க்கும் ஹீரோயின் பிரியங்காவுடன் தமிழுக்கு காதல் என்கிற எக்ஸ்ட்ரா ட்ராக்குடன் முடிகிறது படம்.
சமீபகாலப் படங்களில் அச்சு அசலான சென்னையின் குப்பத்து பாஷையை எந்தப் படத்திலும் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு படம் பி அண்ட் சி ஏரியாவாசிகளுக்கு பிடித்த படமாக மாறியிருக்கிறது.
நாலு பேர்களில் ஹீரோவாக வரும் தமிழ் மட்டுமே பார்க்க கொஞ்சம் லட்சணமாக இருக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள். ரசிகர்கள் டயர்டாகிற அளவுக்கு டயலாக்குகளை பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஹீரோ தமிழ் ஹீரோயின் பிரியங்காவிடம் கெஞ்சுவது, மிஞ்சுவது, அஞ்சுவது என அத்தனை ஏரியாக்களிலும் தேர்ந்த நடிகருக்கான தேடலை வெளிப்படுத்துகிறார்.
ஹீரோயினாக வரும் பிரியங்காவும் சளைத்தவர் இல்லை. சொல்லப்போனால் படத்தில் மிகப்பெரிய ஆறுதல் இவருடைய துணிச்சலான நடிப்பு தான். ஹீரோவிடம் முத்தம் வாங்குவதற்காக மிளகாய் அரைத்த கையோடு அவரை துரத்துவதும், ஒரு இரவில் ஹீரோவைத் தேடி வந்து ”என்ன பண்றது நைட்டானா டிவியில மிட்நைட் மாசாலா பாட்டுகளைப் போட்டு சூடேத்துறாணுங்க”, ”எல்லாப் பொம்பளைக்கு மேட்டர் செஞ்சுட்டுத்தான் தூங்குறாளுங்க…” என்று பேசுவதுமாக சொந்தக் குரலில் அச்சு அசலான சென்னையின் குப்பத்து பாஷையில் மிரட்டியிருக்கிறார்.
இந்த துணிச்சலுக்கே நீங்க கண்டிப்பா ஒரு ரவுண்டு வருவீங்க பிரியங்கா!
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மகாநதி சங்கர், அப்பாவே மகனுடன் சேர்ந்து உட்கார்ந்து சரக்கடிப்பது மாதிரியான சிரித்து ரசிக்க படத்தில் எக்கச்சக்க கேரக்டர்கள் உண்டு. அதே சமயத்தில் தொன தொன என்று படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் ஹீரோவின் நண்பர்களால் ரசிகர்களுக்கு எரிச்சல் வருவதும் உண்டு.
புதியவர் சாம்.டி.ராஜின் இசையில் உன்னாண்ட காதலை பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் கானா வாசம் வீச அப்படியே மனசுக்குள் ரீங்காரமிடுகிறது.
பக்கா லோக்கலான ஒரு படத்தைத் தர வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ? படத்தில் ஆங்காங்கே வரும் ‘வரம்பு மீறிய வசனங்கள்’ கொஞ்சம் அதிர்ச்சியை கொடுக்கிறது.
இருந்தாலும் லோக்கல் ஏரியாவாசிகள் பேசுகிற வசனங்களை கதை ஓட்டத்துக்கு சரியாகப் பொருந்திப் போக வைத்ததில் ஏ கிளாஸ் ஆடியன்சையும் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் இகோர்.