அஜித்துடன் என்னதான் பிரச்சனை? : மனம் திறந்த விஷால்
நாசர் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்கப் பொறுப்புக்கு வந்தவுடன் தனது அணியினரோடு சேர்ந்து செயலாளர் விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக பல ஹீரோக்களும் உதவி செய்து வரும் நிலையில் வழக்கம் போல எந்த திரையுலக விழாக்களிலும் கலந்து கொள்ளாத அஜித் நடிகர் சங்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் பலரும் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்த நிலையில் அஜித் மட்டும் நான் வர மாட்டேன், வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் நன்கொடையாகத் தருகிறேன் என்று சொன்னதாகவும், அதை நடிகர் சங்க நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதோடு அஜித்தின் இந்த எண்ணத்தையும் விஷால் கடுமையாக கண்டித்ததாகவும், அதற்கு விஷாலை அஜித் ரசிகர்கள் திட்டித் தீர்த்தாகவும் கூறப்பட்டது.
இதனால் விஷாலுக்கும், அஜித்துக்குமிடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக அவ்வப்போது மீடியாக்களில் செய்திகள் வெளியாகும்.
இந்நிலையில் கத்தி சண்டை பட ரிலீசை முன்னிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஷாலிடம் அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த விஷால் ‘சந்தர்ப்பம் அமைந்தால் நான் அஜித்துடன் இணைந்து கண்டிப்பாக நடிப்பேன், அவர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்’ என்று மோதல் பிரச்சனை தொடர்பாக வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷால்.