விஸ்வாசம் – விமர்சனம் #Viswasam
RATING – 3/5
நடித்தவர்கள் – அஜீத், நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர்
ஒளிப்பதிவு – வெற்றி
இசை – டி.இமான்
இயக்கம் – சிவா
வகை – ஆக்ஷன், நாடகம், குடும்பம்
சென்சார் பரிந்துரை – ‘U’
கால அளவு – 2 மணி நேரம் 32 நிமிடங்கள்
‘விவேகம்’ படத்தால் அப்செட்டில் இருந்த அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இயக்குனர் சிவா தந்திருக்கும் நான்காவது படம் தான் இந்த ‘விஸ்வாசம்’.
தேனி மாவட்டத்தில் முக்கிய தலைக்கட்டாக வலம் வருபவர் ‘தூக்கு துரை’ அஜீத்.
ஊரில் கோவில் திருவிழா ஒன்று நடக்க இருக்கின்ற நிலையில், நீ மனைவி, மகளைப் பிரிந்திருக்கிற சூழலில் எங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷமான திருவிழா தேவையில்லை என்கிறது குடும்பமும், ஒட்டு மொத்த ஊரும். அதோடு பிரிந்து போன மனைவியையும், குழந்தையையும் மீண்டும் ஊருக்கு கூட்டி வந்து அவர்களுடன் சேர்ந்து திருவிழாவை சந்தோஷமாக நடத்த வேண்டுமென்றும் சொல்கிறார்கள்.
ஊர் மக்கள், சொந்த பந்தங்களின் வேண்டுதலுக்காக பிரிந்து போன மனைவி நயன்தாராவை கூட்டி வருவதற்காக மும்பைக்கு செல்கிறார் அஜீத். அங்கு விளையாட்டுப் போட்டி ஒன்றில் சாதிக்கும் வெறியுடன் இருக்கும் மகளுக்கு வில்லன் ஜெகபதி பாபுவால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அவரிடமிருந்து மகளை காப்பாற்றி ஒரு அப்பாவாக தன் மகளின் கனவை நிறைவேற்றினாரா? நயன்தாரா ஏன் அஜீத்தை பிரிந்து சென்றார்? என்பதே மீதிக்கதை.
மாஸ் ஹீரோ என்பதற்காக முழுப்படமும் கமர்ஷியல் என்று ஓவர் டோஸ் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இடைவேளை வரை அஜீத்துக்கான பில்டப் காட்சிகளுடன் நகர்கிறது. அந்த வகையில் முதல் பாதியை அஜீத் ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் அப்பா – மகள் நட்பு, பாசம், மகளின் கனவு நிறைவேற தன்னையே வறுத்திக் கொள்வது என இடைவேளைக்குப் பிறகான காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.
படம் முழுக்க வேட்டி – சட்டையிலேயே வருகிறார் அஜீத். அடிதடி, கெத்து காட்டுவது என ஒரு ரெளடி போல காட்டப்பட்டாலும், ‘தரமான கெட்டவன்’ என ஒரு வசனம் மூலமாக அஜீத்தின் கேரக்டரை புரிய வைத்து விடுகிறார்கள்.
கிராமத்துக்கு மருத்துவ முகாம் நடத்துவதற்காக வரும் நாயகி நயன்தாராவுடன் முதலில் மோதுவதும், பின்பு காதலில் விழுவதும், திருமணம் என்று வரும்போது காதலித்த பெண் கிடைத்து விட்டாளே என்று முடிவெடுக்காமல், நான் அடிதடிப் பேர்வழி, நீங்க டாக்டர் ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகுமா என்று நயனிடம் கேட்கிற காட்சிகளில் அவர் கேரக்டரை எளிமையாக புரிய வைக்கிறார். குறிப்பாக ”இஞ்சார்றா…” என்று தேனி மாவட்ட வட்டார மொழியை அவர் பேசும்போது தியேட்டரே அதிர்கிறது. Take a peek at mr bet app.
யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக் என நான்கு காமெடி நடிகர்கள் இருந்தும் கூட குறிப்பிட்டு ரசிக்கும்படியான காமெடிக் காட்சிகள் படத்தில் இல்லை. மாறாக அஜீத் நயன்தாராவிடம் செய்யும் குறும்புகளை காமெடியாக ரசித்து சிரிக்க முடிகிறது. குறிப்பாக தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுகிற காட்சிகள் அல்டிமேட் காமெடி.
நாயகியாக வரும் நயன்தாரா முதலில் அஜீத்துடன் மோதும் போது காட்டுகிற கோபமும், காதலிக்கும் போது யோசிக்கிற நிதானமும், ஒரு குழந்தைக்கு தாயான பிறகு கண்டிப்பு காட்டுவதுமாக ஒரு பொறுப்பான இளம் பெண்ணாக வருகிறார்.
‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்தின் குழந்தையாக வந்த அனிகா தான் மீண்டும் இதில் அஜித்தின் மகளாக நடித்திருக்கிறார். அப்பா மீதான கோபம், ஜெயிக்க வேண்டுமே என்கிற பயம், விளையாட்டு என்றதும் வருகிற ஆர்வம் என எல்லா இடங்களிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
வில்லனாக வரும் ஜெகபதி பாபு அதிகம் மிரட்டாத ‘அளவான’ வில்லனாக வருகிறார். ”வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்ல. ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்ல.” என ஆங்காங்கே வரும் வசனங்களும் அருமை.
ஒரு மாஸ் படத்துக்குரிய மிரட்டலான பின்னணி இசையைக் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் டி.இமான் ‘கண்ணான கண்ணே’ போன்ற உருக வைக்கும் மெலோடிப் பாடலையும் தரத் தவறவில்லை.
முதல் காட்சியே தேனி மாவட்டத்தை பச்சை பசேல் இடங்களை மிக அற்புதமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. அதன் பிறகு நகர்கிற காட்சிகள் எல்லாமே ‘பளிச்’ ‘பளிச்’ தான்!
அஜீத் ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும், அதே சமயம் எந்த வித முகச்சுளிப்பும் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாகவும் இருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே கவனமாக இருந்திருக்கிறார் இயக்குனர் சிவா. அதற்காகவே சரக்கடிக்கும் காட்சிகளோ? சிகரெட் பிடிக்கும் காட்சிகளோ? இல்லாமல் ஆபாசமோ, அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல் குடும்பம், கிராமம், விவசாயம், காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என ஒரு படத்தில் என்னென்ன இருக்க வேண்டுமோ? அதையெல்லாம் இந்தப் படத்தில் தந்திருக்கிறார்.