2 வருடங்களுக்குப் பிறகு நடக்கவிருந்த ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி ரத்து! – ஏன் தெரியுமா?

பாப்புலாரிட்டியைப் பார்த்து விருதுகளைக் கொடுக்கிறார்கள் என்கிற சர்ச்சைகளுக்கிடையே 9 வருடங்களாக நடந்து கொண்டிருந்தது ‘விஜய் அவார்ட்ஸ்’.

அதே சமயம் நடிகர், நடிகைகளை வைத்து விழா நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் விஜய் டிவி தமிழ்ப்படங்களை வாங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்ததால் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவுறுத்தலின் பேரின் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர், நடிகைகள் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இதனால் இரண்டு ஆண்டுகளும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதற்கிடையே புதுப்படங்களை வாங்குகிறோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்த விஜய் டிவி ‘கடைக்குட்டி சிங்கம்’ உட்பட சில படங்களை வாங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அதோடு தயாரிப்பாளர் சங்கம் கேட்ட 2 கோடி ரூபாயையும் தருவதாக ஒப்புக் கொண்டு நிகழ்ச்சியை இன்று மே 26-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.

அதற்காக சென்னை நேரு அரங்கத்தில் பெரும் பொருட்செலவில் அரங்குகள், வண்ணமயமான மின் விளக்குகள் அமைக்கப்பட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்தது.

இந்நிலையில் விஜய் டிவி நடத்தவிருந்த ‘விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாக அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கிச் சூடு சம்பவம் தான் விழா நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்கிறார்கள்.

சமீபத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாப உயிரிழந்தனர். போலீசாரின் இந்த அத்துமீறலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்த நிலையில் தமிழகமே கொந்தளிப்பான மனநிலையில் உள்ளது.

அதனாலேயே தமிழர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து தமிழகமே துக்கத்தில் உள்ள நிலையில் ஒரு ஆடம்பர விழாவை நடத்தாமல் விஜய்டிவி நிர்வாகம் தவிர்த்ததாகத் தெரிகிறது.

விஜய் டிவியின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விழா பின்னொரு நாளில் நடத்தப்படுமா? என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

10th annual vijay awardsban sterlite issueSterlite IssueVijay AwardsVijay Tv
Comments (0)
Add Comment