உலகம் முழுக்க நிரம்பியிருக்கும் தமிழர்களுக்கு போகிற இடங்களில் எல்லாம் அவர்களின் உரிமையை மீட்க பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுயிருக்கிறது. அப்படிப்பட்ட படமாகத் தயாராகியிருப்பது தான் மலேசியத் தமிழரான அரங்கண்ணல் ராஜூ இயக்கியிருக்கும் ”தோட்டம்.”
முழுக்க முழுக்க மலேசியக் கலைஞர்களின் பங்களிப்புடன் தயாராகியிருக்கும் இப்படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பான சந்திப்பில் நடிகர் ஆரியும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் ”நாம் உண்ணும் உணவு எந்தளவுக்கு விஷம் கொண்டது? அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?” என்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டக்கூடிய வகையில் பேசினார்…
“உலகமயமாக்களுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் வணிகத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் போரைப்பற்றி இந்தப்படம் சொல்கிறது. அதுபோலவே தமிழகத்தில் இருக்கும் மல்டி நேஷனல் கம்பெனிகள் நெடுவாசலை, ஏன் தமிழகத்தை விட்டே போய் விட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதெல்லாம் நடக்காது. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று அதை மாற்ற பலரும் கிளம்பியிருக்கிறார்கள்.
எந்த மாற்றமும் நம்மில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். நாம் சாப்பிடுகிற உணவு முழுக்க முழுக்க விஷம் நிறைந்த உணவாக இருக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தைகளின் பிறந்தநாளுக்கு வெட்டி ஊட்டும் கேக் முழுக்க முழுக்க விஷம். அந்த விஷத்தை தான் நீங்கள் உங்கள் குழந்தைகளின் பிறந்தநாளில் மகிழ்ச்சியாகக் கொடுக்கிறீர்கள். அந்த கேக்குகளில் சோட்டா பீம் போன்ற படங்களை வரைவதற்காகக் சேர்க்கப்படும் செயற்கையான வண்ணங்களில் பல வேதிப்பொருட்கள் இருக்கிறது. அது கேன்சர் உள்ளிட்ட நோய்களை உருவாக்குகிறது. அரசாங்கம் அனுமதி மறுத்த கலர்களைக் கூட அதில் சேர்க்கிறார்கள். இப்படிப்பட்ட கவர்ச்சியான உணவுக்கு நாம் அடிமையாகும் நிலை மாற வேண்டும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் கேன்சர் நோயாளிகள் உருவாகிறார்கள். கேன்சர் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்காக , நம்மைக் கேன்சர் நோயாளியளாக உருவாக்கிக் கொண்டிருக்கிற இந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள்.
நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள சில விஷயங்களை பின்பற்றினாலே போதும்.
வெள்ளைச் சார்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கல் உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அது நம்முள் இருக்கின்ற தீய எண்ணங்களை வெளியில் தள்ளி விடும். பட்டை தீட்டப்பட்ட அரிசியை தவிர்க்க வேண்டும், பாக்கெட் பால் வேண்டவே வேண்டாம். குறிப்பாக மைதா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே ஆரோக்கியமாக வாழ முடியும். தியேட்டர்களில் விற்கின்ற அத்தனை உணவுப் பொருட்களும் மைதா மாவில் தான் தயாராகிறது. அதன் தயாரிப்புச் செலவு மிக மிகக்குறைவு. ஆனால் உங்களிடம் 100, 150 என்று விலை வைத்து விற்கிறார்கள்.
இந்த வழிகளில் எல்லாம் முடிந்தவரை நாம் விழிப்போடு இருப்போம். தமிழகத்தின் சிஸ்டத்தை நாம் மாற்றுவோம். அதன் மூலமாக நம் அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்தை விட்டுச்செல்வோம்” என்றார் ஆரி.