கொரோனா ஊரடங்கு உத்தரவால் அன்றாட கூலித் தொழிலாளர்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உண்ண உணவு இன்றி தவிக்கும் அவர்களுக்கு தன்னார்வத் தொண்டர்கள், மாநில அரசு மற்றும் பிற கட்சியினை சேர்ந்தவர்கள் உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரண உதவியாக வழங்கப்பட்ட பைகளில் நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் கட்சியின் சின்னங்கள் இருந்ததால் கடும் சர்ச்சை உண்டாகியது. இது தொடர்பாக பேசியிருக்கும் கமல்ஹாசன், “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என முன்வந்து, எளிய மக்கள் யாவரும் இந்த ஊரடங்கால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு கட்சி பேதமின்றி நாம் பணி செய்ய வேண்டும் என்கின்ற என் குரலுக்கு செவி சாய்த்து, தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசோடு இணைந்தும், தனியாகவும் களப்பணி ஆற்றி வரும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
உதவி செய்யும் போது ஊடகங்களை அழைத்துச் சென்று புகைப்படங்கள் எடுப்பதையோ, உதவிப் பொருட்களின் மீது கட்சியின் சின்னம் மற்றும் தலைவரின் புகைப்படம் ஆகியவற்றை ஒட்டுவதையோ மக்கள் நீதி மய்யம் ஒரு போதும் செய்யாது. உங்களிடம் உதவி பெறும் நபர்களோடு புகைப்படங்கள் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் வாழ்வாதாரம் நசிந்து போய், உள்ளம் வெதும்பி இருக்கும் அந்த எளிய மக்களை உங்கள் புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்திவிடும்” என்று கூறியிருக்கிறார்.