தமிழில் வெற்றி பெற்ற வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் `பீமிலி கபடி ஜட்டு’ என்ற டைட்டிலோடு ரீமேக் செய்து வெற்றிப்படமாக இயக்குநராக அறியப்பட்டவர் டி.சத்யா.
அந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கபடி விளையாட்டை கதைக்களமாக்கி டி.சத்யா இயக்கும் வீடெவாடு என்ற தெலுங்குப்படத்தை தமிழில் ‘யார் இவன்’ என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.
இந்த படத்தின் தயாரிப்பாளரான சச்சின் ஜோஷி படத்தை தயாரிப்பதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஈஷா குப்தா நடிக்க, இவர்களுடன் பிரபு, சதீஷ், கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசுக்குத் தயாராகும் இப்படத்தைப் பற்றி இயக்குநர் டி.சத்யா சந்திப்பில் பேசிய போது : இந்த யார் இவன்’ படம் காதலும், கபடியும், ஆக்ஷனும் கலந்த க்ரைம் திரில்லர்.
கதையின் நாயகன் சச்சின் கபடி விளையாட்டு வீரர். பணக்கார கதாநாயகி ஈஷா குப்தா கபடி ரசிகை. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.
திருமணம் நடந்த இரண்டாவது நாளே கதாநாயகி படுகொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்ததாக கதாநாயகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதைத்தான் விறுவிறுப்பான காட்சிகளுடன் படமாக்கியிருக்கிறோம் என்றார்.
சந்திப்பில் பேசிய காமெடி நடிகர் சதீஷ் “இந்தப்படம் வெற்றியடைவதில் மீடியாக்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம். உங்கள் சப்போர்ட் இல்லாமல் திரைப்படங்களின் வெற்றி சாத்தியமில்லை. அப்படி எழுதினால் நிறைய தயாரிப்பாளர்கள் வருவார்கள். என்றவர் விமர்சனம் குறித்துப் பேசினார்… இப்போதெல்லாம் எல்லோரும் வீடியோக்களில் படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
சமீபத்தில் கூட விவேகம் படத்தைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். அவர் படத்தை மட்டும் திட்டியிருந்தால் பரவாயில்லை, அவ்ளோ பெரிய மனுஷன் அஜித்தை தனிப்பட்ட முறையில் திட்டியது தான் எனக்கு வருத்தமாகி விட்டது. இனிமேலாவது அந்த மாதிரியான விமர்சனங்களை தவிர்த்து படத்தின் வெற்றிக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்றார்.
நீங்களும் சிரிக்கிற மாதிரி ஒரு படத்திலாவது காமெடி பண்ணுங்களேன் சதீஷ்.