ஆண்டு தோறும் கோலிவுட்டில் ரிலீசாகிற படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தாலும், சம்பாதிக்கிற பணத்தில் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஹீரோக்கள் தான் தாங்கள் சம்பாதிக்கிற பணத்தில் குறிப்பிட்ட தொகையை உதவிகளுக்கு செலவிடுகிறார்கள்.
நல்லதோ? கெட்டதோ? தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஏதாவது உதவி என்றால் உடனே ஓடோடிச் சென்று தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருபவர் நடிகர் விஜய்.
இதுவரை அவரது ரசிகர்களுக்கு மட்டும் தான் விஜய் இப்படியெல்லாம் உதவிகளைச் செய்வார் என்று இவ்வுலகம் நினைத்துக் கொண்டிருக்க, கடந்த சில வருடங்களாகவே தான் வாழ்ந்து கொண்டிருக்கும் திரையுலகுக்கும் சைலண்ட்டாக பல உதவிகளைச் செய்து வருகிறார் என்பது தான் வெளிச்சத்துக்கு வராத விஷயம்.
ஆமாம், கடந்த சில வருடங்களாகவே தனது ஒவ்வொரு படம் ரிலீசான பிறகும் திரையுலகில் இருக்கின்ற ஏதாவது ஒரு சங்கத்துக்கு ஒரு பெருந்தொகையை நன்கொடையாகக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் விஜய்.
சில வருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெரிய தொகையை நன்கொடையாகக் கொடுத்தார். அதன்பிறகு இயக்குநர்கள் சங்கத்துக்கு ஒரு தொகையை நன்கொடையாகக் கொடுத்தார்.
தொடர்ந்து ‘தெறி’ படத்தை முடித்த கையோடு ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு நன்கொடை கொடுத்தவர் சமீபத்தில் 50-வது நாளை கொண்டாடிய ‘பைரவா’ படத்தில் நடித்து முடித்த கையோடு படத்தொகுப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு பெருந்தொகையை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். விஜய் சைலண்ட்டாக செய்து வருகிற இந்த பேருதவி விஜய்யின் அடுத்தடுத்த படங்களிலும் சினிமாவில் இருக்கிற மற்ற சங்கங்களுக்கு தொடருமாம்.
”பென்சில், பேனா கொடுத்தாலே அதை தங்களுக்கு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஹீரோக்களுக்கு மத்தியில், ஒவ்வொரு படத்தை முடித்த பிறகு சினிமாவில் இருக்கிற சங்கங்களின் நலனுக்காக ஒரு பெரிய தொகையை உதவியாகக் கொடுத்து வருகிறார். தமிழ்சினிமாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு நல்ல மனதோடு விஜய் செய்கிற அந்த உதவியை எப்படி வெளியில் சொல்லாமல் இருக்க முடியும்?” என்று நெகிழ்கிறது நன்கொடையைப் பெற்ற திரையுலக சங்கங்கள்.
விஜய்யின் நல்ல மனம் வாழ்க!