தேசிய விருதை தட்டி வந்த வெற்றிமாறனின் ’விசாரணை’ படத்தில் இப்படியும் போலீஸ் இருப்பாங்களா என்று அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் மொட்டை போலீசாக வரும் நடிகர் அஜய் கோஸ். அந்தப் படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் போலீஸ் அதிகாரியாக தமிழில் நடித்திருக்கும் படம் தான் ‘தப்பு தண்டா.’
பாலு மகேந்திராவில் பள்ளியிலிருந்து வந்திருக்கும் ஸ்ரீகண்டன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ விழாவில் அஜஸ் கோஸ் பேசிய வெளிப்படையான பேச்சு அங்கிருந்தவர்களிடம் கைதட்டல்களை அள்ளியது.
”சொந்த ஊரும், அறிமுகமும் ஆந்திராவாக இருந்தாலும் எனக்கு முகவரி கொடுத்தது இந்த தமிழ் சினிமா தான். இந்த மாதிரி யூனிட்ல உள்ள எல்லோருக்கும் ஒரே மாதிரி மரியாதை தருகிற ஒரு சினிமா இண்டஸ்ட்ரி இந்தியாவுல வேற எங்கேயும் இல்லை” என்றவாரே பேச ஆரம்பித்தார்…
எனக்கு தமிழ் இண்டஸ்ட்ரி ரொம்ப பிடிக்கும், ஏன்னா எல்லா மொழிப் படங்களுக்கும் சென்னை தான் தாய். எப்போது தமிழ் இண்டஸ்ட்ரிக்கு போவோம்னு ஆசையா இருந்துச்சு.
ஆந்திராவுல நான் சில படங்கள் நடிச்சிருந்தாலும் அங்க தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இங்கே இருக்கிற வெற்றிமாறன் என்னை அவருடைய படத்தில் நடிக்க வைத்தார். அந்த ‘விசாரணை’ படம் எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. ஆஸ்கார் வரை சென்று வந்த விசாரணைப் படத்தில் நடித்த என்னை இங்குள்ள தமிழ் மீடியாக்கள் தான் முதன்முதலில் போன் போட்டு பேட்டியெடுத்தார்கள். அதன்பிறகு தான் ஆந்திர மீடியாக்கள் என்னைப் பற்றி எழுதின. இது என்ன தர்மம்?
இங்குள்ள தமிழ் மக்களிடம் நல்ல அரசியல் விழிப்புணர்வும், பொதுப்பிரச்சனைகளுக்கு ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கிற ஒற்றுமை உணர்வும் நெறையவே இருக்கு. இந்தியாவுல வேற எந்த மாநிலத்திலும் இப்படி மரியாதையும், அன்பையும் கொடுக்கிற மக்களை பார்க்கவே முடியாது.
ஆந்திரா சினிமா இண்டஸ்ட்ரியில சக நடிகர்களுக்குள்ளேயே ரொம்ப ஈகோ இருக்கு. கூலிங்கிளாஸ் கண்ணாடியை போட்டுக்கொண்டு எப்படி இருக்கீங்க? என்று திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். ஆனால் இங்க அதெல்லாம் இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதையைத் தர்றாங்க. இங்க காலையிலேயே பார்த்தா ஆட்டோ ஸ்டாண்ட்ல இருக்கிற டிரைவர் அண்ணன்கள் எல்லோரும் பேப்பரைப் படிக்கிறார்கள். ஆனால் ஆந்திராவுல் வாயில் மாவாவைப் போட்டுக் கொண்டு ‘ஆ வெல்லு’ என்கிறார்கள்.
இந்த தமிழ்நாட்டு மக்கள் விசாரணை படத்தின் மூலமாக எனக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். ‘தப்பு தண்டா’ என்னோட இரண்டாவது படம். தொடர்ந்து இன்னும் பல பட வாய்ப்புகள் வில்லன் கேரக்டர்களாக வந்தால் தமிழ்நாட்டிலேயே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு இருந்து விடுவேன். தமிழ் ரசிகர்களின் அன்புக்கு ஈடு இணையே இல்லை என்றவர் திடீரென்று விழா மேடையில் விழுந்து கையெடுத்துக் கும்பிட்டு உணர்ச்சி பொங்க தமிழக ரசிகர்களுக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார்.
உலகுக்கே தமிழன் முன் மாதிரியாக இருக்கிறான். எதிலும்! எப்போதும்!!