தனக்கென்று தனிப்பட்ட கொள்கை, கோட்பாடுகளுடன் வெளி உலகத்திடமிருந்து சற்று விலகியே இருக்கும் அஜித்திடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தீவிரம் உணர்த்தப்பட்டதாலோ என்னவோ மனம் மாறி நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.
நடிகர் சங்கம் அறிவித்த போராட்டம் ”மெளன அறப்போராட்டம்” என்பது உலகத்துக்கே தெரியும்.
ஆனால் அதற்கான எந்த மாண்பையும் போராட்டம் நடந்த இடத்தில் அவர் வெளிப்படுத்தாதது தான் இப்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
அஜித்தை சக நடிகர்களே நேரில் பார்ப்பது அரிதாகி விட்டதால் மெளன போராட்ட மேடையில் இருந்த அவருடன் கை குலுக்குவது, நலம் விசாரிப்பது, மனம் விட்டுப் பேசுவது, கட்டிப்புடி வைத்தியம் பார்ப்பது என நடந்து கொண்டதால் மேடையில் புன்னகை முகமாகவே அவர் காட்சியளித்தார்.
இந்தப் புகைப்படங்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக அதில் ரஜினியோடு சிரித்துப் பேசுகிற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதைப்பார்த்து வருத்தப்பட்ட ரசிகர் ஒருவர் ”ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட போது தூங்கிக் கொண்டிருந்தீர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திலோ சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்களையெல்லாம் பார்த்தால் உங்கள் இரண்டு பேருக்கும் ஏளனமாகத் தெரிகிறது அதானே? என்று ஆவேசத்தோடு கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இதுபோன்ற அஜித்துக்கு எதிரான பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழ் உணர்வுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களையே நொந்து போகச் செய்திருக்கிறது.
இதுக்குத்தான் அப்பப்ப வெளியில ‘தல’ காட்டணும்கிறது!