‘ஐயிட்டம் சாங்’ ஆடுவது ரோபோ சங்கர்! : லட்சுமி ராமகிருஷ்ணனின் துணிச்சல்

ரு நடிகையாக, ஒரு இயக்குநராக ரசிகர்களிடம் தெரிந்ததை விட ”சொல்வதெல்லாம் உண்மை” நடுவராகத்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம்.

அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ”இந்தம்மாவுக்கு ஏன் இந்த பஞ்சாயத்து பண்ற வேலை” என்று கமெண்ட் அடித்தாலும் அந்த நிகழ்ச்சியால் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாம்.

அந்தளவுக்கு ஒரு நடுவராக மட்டுமில்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து நியாய அநியாங்களை அலசுகிறார்.

அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது இயக்குநர் ஆசைக்கு அணை போட்டு விடாமல் அடுத்தடுத்து படங்களையும் இயக்கி வருகிறார்.

அந்த வகையில் ”ஆரோகணம்”, ”நெருங்கி வா முத்தமிடாதே” படங்களைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் அடுத்த படம் தான் ”அம்மணி”.

வழக்கமான கமர்ஷியல் எல்லை என்பதையும் தாண்டி படம் பார்க்க வருகிற ரசிகர்களை ஏதோ ஒரு வகையில் அவர்களின் மனசுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக இருக்குமாம் இந்த ”அம்மணி”.

இன்னைக்கும் என்னோட ”ஆரோகணம்” படத்தைப் பத்தி நான் போகிற இடங்களில் பேசுறாங்க. அந்த மாதிரி ரசிகர்கள் மத்தியில் நம்ம படைப்பு ஏதாவது ஒரு வகையில பேச வைக்கணும் என்று சொல்லும் லட்சுமி ராமகிருஷ்ணன் சாலம்மா அம்மணி என்கிற இரண்டு பெண் கதாபாத்திரங்களின் நட்பை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறாராம்.

இதில் சாலம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணனே நடிக்க, அம்மணியாக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் த்ரிஷாவுக்கு பாட்டியாக நடித்த சுப்பலட்சுமி நடித்திருக்கிறார்.

படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த இன்னொரு துணிச்சலான விஷயம் ரோபோ சங்கரை ஐட்டம் டான்ஸர் ஆக்கியது.

எல்லாக் கமர்ஷியல் படங்களிலும் பெண்களை ஐட்டம் டான்ஸரா ஆக்கி விடுறாங்க. பதிலுக்கு நாமளும் ஒரு ஆணை ஐட்டம் டான்ஸ் ஆட விட்டா என்னன்னு யோசிச்சேன். அதுக்கு ரோபோ சங்கர் ரொம்ப பொருத்தமா இருந்தார். ஆட விட்டுட்டேன் என்றார்.

இந்தப்படம் தயாராகி ரிலீஸ் ஆவதற்குள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும், தயாரிப்பாளர் வெண் கோவிந்தாவுக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டு விரிசல் விழுந்து விட்டது.

அது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்தேன் என்றார் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா.

மேலும் அவர் என்னைப் பொருத்தவரை நான் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்பதை விட படத்துக்கு பைனான்ஸ் பண்ணிருக்கேன் என்று தான் நினைத்தேன். ஆனால் பிறகுதான் ஒரு படம் தயாராவதில் எத்தனையோ பேருடைய உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பு ஏன் முடங்கிக் கிடக்க வேண்டும்? அது சரியல்ல என்று உணர்ந்து இப்போது ரிலீஸ் செய்யத் தயாராகி விட்டேன். அந்த தவறைச் செய்ததற்கு இப்போது நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கண்டிப்பாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக எனக்கு அமையும் என்றார்.

மனசு இருந்தால் மார்க்கமுண்டு!

AmmaniAmmani Movie NewsLakshmy Ramakrishnanrobo shankar
Comments (0)
Add Comment